தஞ்சை மூலை அனுமாருக்கு பழங்களால் சிறப்பு அலங்காரம்


தஞ்சை மூலை அனுமாருக்கு பழங்களால் சிறப்பு அலங்காரம்
x

தஞ்சை மூலை அனுமாருக்கு பழங்களால் சிறப்பு அலங்காரம்

தஞ்சாவூர்

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி தஞ்சை மூலை அனுமாருக்கு பழங்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

மூலை அனுமார்

தஞ்சை மேலவீதியில் உள்ள மூலை அனுமார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். அந்நிய படையெடுப்பு காரணமாக காஞ்சீபுரம் பங்காரு காமாட்சி அம்மன் தஞ்சை வந்த போது மூலை அனுமார் பங்காரு காமாட்சி அம்மனுக்கு அடைக்கலம் கொடுத்து காத்தார். தனது ஆலயத்திற்கு அருகில் பங்காரு காமாட்சி அம்மன் ஆலயம் அமைய மன்னனுக்கு கட்டளையிட்டார்.

இதன் காரணமாக பங்காரு காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவிற்காக யாகசாலையில் பயன்படுத்தும் மண் (மிருத்சங்கர்ணம்) மகாளய அமாவாசை அன்று மூலை அனுமார் கோவிலில் இருந்து எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாளய அமாவாசை

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்தகோவிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை யொட்டி நேற்று காலை 7 மணிக்கு லட்ச ராமநாமம் ஜெபம் தொடக்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகள் நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு கனிகளால் ஆன சிறப்பு அலங்காரமும், 6.30 மணிக்கு அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் அதனையடுத்து 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலை சாற்றி தீபாராதனை நடைபெற்றது. மூலை அனுமாருக்கு மகாளய அமாவாசை அன்று பழங்களால் ஆன மாலை சாற்றி வழிபட்டால் பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

சிதறு தேங்காய் வழிபாடு

மூலை அனுமார் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற மஞ்சள் பூசிய தேங்காயை தங்களது இல்லத்தில் இருந்து எடுத்து வந்து கோவிலில் ராசி மண்டலம் சிற்பத்தில் அவரவர் ராசிக்கு கீழ் நின்று தரிசனம் செய்து மனம் உருகி பிரார்த்தனை செய்து பின் காணிக்கை செலுத்தி சிதறு தேங்காய் உடைத்தால் திருமண தடைகள் நீங்கும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்கள் மற்றும் கர்ம வினைகள்யாவும் நீங்கும் என்பது ஐதீகம். அதன்படி நேற்று பக்தர்கள் தேங்காய் எடுத்து வந்து உடைத்து வழிபாடு செய்தனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.


Next Story