தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி

தைப்பூசம்

தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். தை மாதம் பூசம் நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் ஒன்றாக வரக்கூடிய நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி தைப்பூசத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பால்குடம், அலகு குத்துதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

திருச்சி ரெயில்வே ஜங்ஷன் அருகே உள்ள வழிவிடு வேல்முருகன் கோவில், கே.கே. நகர் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் முருகன் சன்னிதி, அய்யப்பநகர் பகுதியில் உள்ள முருகன் கோவில், கல்லுக்குழி பிள்ளையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தைப்பூச விழா நடைபெற்றது. ஜங்ஷன் வழிவிடு வேல் முருகன் கோவிலில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

காசி விஸ்வநாதர் கோவில்

தா.பேட்டை காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் சிவசக்தி, சோமாஸ்கந்தர் எழுந்தருளினர். முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தனி பல்லக்கில் மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து தா.பேட்டை காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஆராய்ச்சி ஆற்றில் உள்ள திடலில் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினர். அப்போது திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வழிபட்டனர்.

இதேபோன்று தா.பேட்டை அடுத்த தேவானூர் சண்முககிரி மலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் ராஜ அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி அருள் பாலித்தார். இதேபோன்று தா.பேட்டை அடுத்த என்.கருப்பம்பட்டி கிராமத்தில் வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மலைக்கோட்டை

தைப்பூசத்தையொட்டி மலைக்கோட்டை சுற்றியுள்ள முருகன் கோவில்களில் உள்ள சாமிகளை காவிரி கரையோரம் தீர்த்தவாரி செய்து மீண்டும் மலைக்கோட்டை சுற்றி அந்தந்த கோவில்களுக்கு கொண்டு சென்றனர். இதில் சர்க்கார்பாளையத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் உள்ள முருகன், வள்ளி-தெய்வானையுடன் மலைக்கோட்டை சுற்றி வலம் வந்தார். அதேபோல் ஏராளமான கோவில்களை சேர்ந்த சுவாமிகள் மலைக்கோட்டையை சுற்றி வலம் வந்தனர். இந்த சுவாமிகள் வரும் வழியில் மலைக்கோட்டை சுற்றி பல்வேறு இடங்களில் அலங்காரங்கள் செய்ததுடன் பக்தர்கள் திரளாக நின்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story