ஏலகிரி மலையில் பாராகிளைடிங் வசதி செய்து தரப்படுமா?


ஏலகிரி மலையில் பாராகிளைடிங் வசதி செய்து தரப்படுமா?
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

ஏலகிரி மலையில் பாராகிளைடிங் வசதி செய்து தரப்பட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்கின்றனர்.

திருப்பத்தூர்

ஏழைகளின் ஊட்டி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகில் உள்ள ஏலகிரிமலை, கடல் மட்டத்தில் இருந்து 1048 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் 'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பகுதி வாலாஜா- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகேயும், வாணியம்பாடி- சேலம் தேசிய நெடுஞ்சாலையிலும் உள்ளதால், இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஏலகிரிமலைக்கு அரசின் சார்பில் பல்வேறு மேம்பாட்டு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்களுக்கு சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. பொதுமக்கள் ஏலகிரிமலையில் உள்ள ஏரிகளின் அழகை சுற்றி பார்க்க படகு இல்லம், இயற்கை பூங்கா, குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.

பாரா கிளைடிங்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் வகையில் ஏலகிரிமலையை நவீனப்படுத்தவும், சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காகவும் வெளி நாட்டில் இருந்து வீரர்களை ஏலகிரிமலைக்கு வரவழைத்து, வானில் பறந்தபடி இயற்கையின் அழகை ரசிக்கும் வகையில் 'பாரா கிளைடிங்' வசதி செய்து தரப்பட்டது. இந்தச் சாகச விளையாட்டுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது.

அதன் பிறகு பாராகிளைடிங் தெரியாத சாதாரண மக்களும், பாரா கிளைடிங் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்.

அப்போது பாரா கிளைடிங்கில் பங்கேற்க விரும்பினால் கட்டணம் செலுத்தி தகுந்த விமானியுடன் சுற்றுலா பயணிகள் பறக்கலாம் என்ற வசதி இருந்தது. இதனால் மலையின் மேட்டுப்பகுதியில் இருந்து பாரா கிளைடிங் செய்து, சுமார் 20 நிமிடங்கள் வானத்தில் பறந்து இயற்கையின் அழகை, 'கழுகுப் பார்வை'யில் ரசிக்க முடிந்தது. இது சுற்றுலா பயணிகளை பெரிதாக கவர்ந்தது.

திடீரென நிறுத்தப்பட்டது

சில ஆண்டுகளுக்கு முன்பு பாராகிளைடிங் பயிற்சி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், ஏலகிரிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். ஏலகிரிமலையில் மீண்டும் பாராகிளைடிங் ஏற்படுத்த வேண்டும் எனப் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஏலகிரிமலையில் ரூ.3 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. இதில் சாகச உணவகம், வரவேற்பு அறையின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.

இந்தச் சுற்றுலா தளத்தில் செயற்கை பாறை ஏறுதல், டிரக்கிங் பயணம் செய்யும் வசதியும் நடைபெற்று வருகிறது. இதில் பாராகிளைடிங்கையும் சேர்க்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசின் கவனத்துக்கு...

இதுகுறித்து கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கூறுகையில், ஏலகிரி மலையில் அனைத்து வசதிகளும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு சுற்றுலா நிதி திட்டத்தில் கோடை விழா அரங்கம் உள்ளிட்டவைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் பல மாநிலங்களை சேர்ந்த மக்களின் கனவாக இருக்கும் ஏலகிரி மலையில், வானத்தில் பறக்கும் பாராகிளைடிங் வசதி மீண்டும் தொடங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பாராகிளைடிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story