வரலாறு காணாத மழையால் பாதிப்பு: துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது


வரலாறு காணாத மழையால் பாதிப்பு: துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது
x

துபாய் சர்வதேச விமான நிலையம் அடுத்த 24 மணி நேரத்தில் முழு செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

துபாய்,

வரலாறு காணாத மழையால் கடந்த 2 நாட்களாக துபாய் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது முனையம் 1-ல் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து முழு செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துபாய் சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் கடந்த 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பெய்த வரலாறு காணாத மழையால் அமீரகம் ஸ்தம்பித்தது. இதில் துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின. கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்ததால் பல முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் வாகனங்களில் வெளியே செல்ல முடியாத நிலை இருந்து வந்த நிலையில் தற்போது நிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது.

விமான ஓடுபாதையில் சூழ்ந்த வெள்ளம் காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ளத்தில் மூழ்கிய ஓடுபாதையில் நிலைமை சீராகும் வரை விமானங்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று (வியாழக்கிழமை) காலை வரை 2 நாட்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 1,244 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அல் மக்தூம் மற்றும் அபுதாபி ஷேக் ஜாயித் விமான நிலையங்களுக்கு 61 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

நேற்று காலை முதல் விமான நிலையத்தின் முனையம் 1-ல் பகுதி செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியது. இதில் இருந்து சுமார் 50 சர்வதேச விமானங்கள் விமான நிலையத்திற்குள் வர அனுமதிக்கப்பட்டு உள்ளன. எமிரேட்ஸ் மற்றும் பிளை துபாய் விமானங்கள் முனையம்-3 வழியாக இயக்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து முழு செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story