விமானத்தில் இருந்து திடீரென வெளியான புகை.. பயணிகள் பீதி


விமானத்தில் இருந்து திடீரென வெளியான புகை.. பயணிகள் பீதி
x
தினத்தந்தி 24 April 2024 11:54 AM GMT (Updated: 24 April 2024 11:55 AM GMT)

விமானத்தின் இறக்கை பகுதியில் இருந்து புகை வந்ததாகவும், என்ஜினை ஆப் செய்ததும் புகை வந்தது நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ:

ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம், இன்று சுமார் 200 பயணிகளுடன் ஷின் சித்தோஷ் விமான நிலையத்திற்கு வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கியதும், இறக்கை பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. பயணிகள் அவசரம் அவசரமாக இறங்கினர். ஆனால் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதுதொடர்பாக ஜப்பான் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே. செய்தி வெளியிட்டுள்ளது. அதில், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியபின், இறக்கை பகுதியில் இருந்து புகை வந்ததாகவும், என்ஜினை ஆப் செய்ததும் புகை வந்தது நின்றுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆயில் கசிவு காரணமாக புகை வந்திருக்கலாம், காக்பிட்டில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்பில், ஆயில் அழுத்தம் குறைந்ததை காட்டியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானமும் கடலோர காவல்படை விமானமும் மோதி தீப்பிடித்தன. இதில், கடலோர காவல்படை விமானத்தின் 5 பணியாளர்கள் உயிரிழந்தனர். பைலட் காயமடைந்தார். பயணிகள் விமானத்தில் இருந்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் விரைவாக வெளியேற்றப்பட்டதால், காயமின்றி உயிர்தப்பினர்.


Next Story