'எக்ஸ்' வலைதளத்துக்கு தடை விதித்த பாகிஸ்தான்


எக்ஸ் வலைதளத்துக்கு தடை விதித்த பாகிஸ்தான்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 18 April 2024 10:30 PM GMT (Updated: 19 April 2024 7:05 AM GMT)

பாகிஸ்தான் அரசின் சட்டபூர்வ உத்தரவுகளை எக்ஸ் நிறுவனம் கடைப்பிடிக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரபல சமூக வலைத்தளமான 'எக்ஸ்' தளத்துக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் எக்ஸ் தளத்தை பயன்படுத்துவதில் அதன் பயனர்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டனர். இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் உள்பட பலர் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது பாகிஸ்தான் அரசு சார்பில் உள்துறை மந்திரி குர்ரம் ஆகா அறிக்கை ஒன்றை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்த அறிக்கையில், "பாகிஸ்தான் அரசின் சட்டபூர்வ உத்தரவுகளை எக்ஸ் நிறுவனம் கடைப்பிடிக்கத் தவறியது. எக்ஸ் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான கவலைகள் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டும், அதனை நிறுவனம் சரிசெய்யவில்லை. எனவேதான், தடை விதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது" என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே எக்ஸ் தளத்தின் செயல்பாடு தொடர்பான பாகிஸ்தான் அரசின் கவலைகளை புரிந்துகொள்ள அந்த அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாக எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story