ஆசிய கிரிக்கெட்டுக்கு வராவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியை புறக்கணிப்போம் - பாகிஸ்தான் மீண்டும் மிரட்டல்


ஆசிய கிரிக்கெட்டுக்கு வராவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியை புறக்கணிப்போம் - பாகிஸ்தான் மீண்டும் மிரட்டல்
x

Image Courtesy : ANI

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால், இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியை புறக்கணிக்க வேண்டியது வரும் என்று பாகிஸ்தான் மீண்டும் எச்சரித்துள்ளது.

கராச்சி,

6 அணிகள் பங்கேற்கும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இரு நாட்டு உறவு சீராக இல்லாததால் இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது. அதற்கு பதிலாக இந்த போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து இது குறித்து விவாதித்து முடிவு எடுக்க பக்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை என்று இந்தியாவும், தங்கள் நாட்டில் தான் ஆசிய கோப்பை போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக இருந்ததால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. போட்டி நடக்கும் இடம் குறித்து அடுத்த மாதம் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

இதற்கிடையே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் விவரம் கசிந்துள்ளது. ஆசிய கோப்பை போட்டி விவகாரத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப்பிடம் ஆலோசித்த பிறகே அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி ஆசிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அவர், 'ஆசிய கோப்பை கிரிக்கெட் பல நாடுகள் பங்கேற்கும் போட்டி. இந்திய அணிக்கு மிக உயரிய பாதுகாப்பு வழங்குவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் ஆர்வமுடன் உள்ளது. எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானுக்கு அணியை அனுப்பமாட்டேன் என்று சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை.

ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி பெறாவிட்டால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக (அக்டோபர்-நவம்பர்) இந்தியாவுக்கு செல்லாது' என்று நஜம் சேத்தி, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷாவிடம் உறுதிப்பட கூறியிருக்கிறார்.

மேலும் நஜம் சேத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர்களிடம் 'அடுத்த கூட்டத்திற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களது அரசிடம் பேசி ஆசிய கோப்பை போட்டிக்கு அணியை அனுப்புவது குறித்து தெளிவான முடிவை எடுக்க வேண்டும். அப்போது தான் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது குறித்து நாங்கள் ஐ.சி.சி.யிடம் விவாதிக்க முடியும்' என்றும் கூறியிருக்கிறார்.

2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை நடத்தும் உரிமம் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட போது, அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய பிரதிநிதிகள் ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் நஜம் சேத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

முந்தைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா, இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால் உலகக் கோப்பை போட்டியில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்கும் என்று மிரட்டல் விடுத்தார். அதே பாணியை நஜம் சேத்தியும் இப்போது தொடருகிறார்.


Next Story