தலையங்கம்

தேர்தல் முடிந்த பிறகு கட்டுப்பாடுகள் எதற்கு?


தேர்தல் முடிந்த பிறகு கட்டுப்பாடுகள் எதற்கு?
16 April 2024 8:16 PM GMT

இந்தியா முழுவதும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதிவரை 7 கட்டங்களாக நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஜூன் 6-ந்தேதிவரை 81 நாட்கள் தேர்தல் காலமாக கருதப்படுகிறது. இந்த 81 நாட்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதுதான் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது.

தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போடச் சொல்லி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பது வரவேற்புக்குரியது. என்றாலும், பொதுமக்கள், வியாபாரிகளை பெரிய இன்னலுக்கு ஆளாக்கிவிடுகிறது. இந்தியா முழுவதும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதை கண்காணிக்க ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழு மற்றும் ஒரு வீடியோ குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வாகன சோதனை என்ற பெயரில், ஆங்காங்கே நின்று வாகனங்களை வழிமறித்து சோதனை நடத்துகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஒரு ரூபாய் அதிகமாக கொண்டு சென்றாலும், அந்த தொகைக்கு உரிய ஆவணம் இல்லையென்றால் பணத்தை பறிமுதல் செய்து விடுகிறார்கள்.

இப்போது திருமண சீசன். எவ்வளவு ஏழையாக இருந்தாலும் தங்கத்திலான திருமாங்கல்யத்தை ஒரு மஞ்சள் கயிற்றில் கட்டி தாலியாக கட்டுவார்கள். ஒரு பவுன் தங்கத்தின் விலையே இப்போது ரூ.55 ஆயிரத்தை தொட்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி வீட்டில் பணத்தை சேமித்து வைக்கும் பெண்கள், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் திருமண செலவுக்காக அதை கொடுக்கும்போது, அதற்கு என்ன ஆவணம் வைத்திருக்க முடியும்?. அந்த பணத்தையும் பறிமுதல் செய்தால் என்ன செய்வார்கள்?.

இதுபோன்ற நடவடிக்கையால் பல ஊர்களில் மாட்டு சந்தைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. காரணம் மாடு வாங்கச் செல்பவர்களிடமும் விற்றுவிட்டு திரும்புபவர்களிடமும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கையில் இருக்கும். அவர்களிடம் எல்லாம் வாகன சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்யும்போது பெரும் துயரத்துக்குள்ளாகிறார்கள். இவ்வாறான கெடுபிடியால் அனைத்து தொழில்களும் நசிந்து போய்விடுகின்றன. "இந்த சோதனையெல்லாம் தேர்தல் நாளான 19-ந்தேதியோடு முடிந்துவிடும். அதற்கு பிறகு சகஜ வாழ்க்கை தொடங்கிவிடும்" என்று நினைத்து வந்த மக்களுக்கு பேரிடியாக 19-ந்தேதி தேர்தல் முடிந்தாலும் ஓட்டு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந்தேதிவரை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டுசெல்ல தடை இருக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளதுதான் பேரிடியாக அமைந்துள்ளது.

இந்த கட்டுப்பாடே தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது, அதற்கான பண நடமாட்டத்தை தடுக்கவேண்டும் என்பதுதான். ஆனால், தேர்தல் முடிந்த பிறகு எந்த வாக்காளருக்கும் எந்த வேட்பாளரும் பணம் கொடுக்கப்போவதும் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், இப்போது தெருத்தெருவாக வந்து வாக்கு கேட்டுவரும் கட்சிக்காரர்கள் தேர்தல் முடிந்த அடுத்த நாள் எங்கும் வரப்போவதில்லை. எனவே, தேர்தல் முடிந்தவுடனேயே இந்த கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் அரசியல் கட்சியினரும் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுக்கவேண்டும். தேவை இல்லாத கட்டுப்பாடு லஞ்ச ஊழலுக்குத்தான் வழிவகுக்கும்.