பல தளங்களில் பயணிக்கும் பிரவீனா


பல தளங்களில் பயணிக்கும் பிரவீனா
x
தினத்தந்தி 15 Oct 2023 1:30 AM GMT (Updated: 15 Oct 2023 1:30 AM GMT)

வேலைக்காக செல்லும் இடத்தில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். செய்யும் வேலைக்கு தகுந்தவாறு உடை அணிந்து புன்னகை நிறைந்த முகத்துடன் பணியாற்ற வேண்டும்.

நிதி ஆலோசகர், ஓட்டல் மேலாண்மையாளர், டப்பிங் தரப் பரிசோதகர், புகைப்படக் கலைஞர், சொத்து மேலாண்மை ஆலோசகர் என பல்வேறு தளங்களில் திறம்பட செயல்பட்டு வருகிறார் சென்னை போரூரில் வசிக்கும் பிரவீனா மீனா. அவருடன் ஒரு சந்திப்பு.

"எனது பூர்வீகம் மதுரை. நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பையும் இங்குதான் முடித்தேன். பின்னர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பிரிவிலும், திரைப்பட நிறுவனம் ஒன்றின் திட்ட மேலாளராகவும் பணிபுரிந்தேன். தற்போது டப்பிங் துறையில் தரக்கட்டுப்பாட்டு பரிசோதகராகவும், சொத்து மேலாண்மை ஆலோசகராகவும், தனியார் நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓ. ஆகவும், புகைப்படக் கலைஞராகவும், குடும்பத் தலைவியாகவும் இருந்து வருகிறேன்".

பல துறைகளில் வேலை செய்வதன் மூலமாக நீங்கள் தெரிந்து கொண்ட சுவாரசியமான விஷயம் என்ன?

எந்த துறையாக இருந்தாலும், நுகர்வோரின் தேவையை அறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும். சில இடங்களில் பொறுமை மிகவும் அவசியமானது. ஒவ்வொரு நிலையிலும், புதுமையான விஷயங்களை உட்புகுத்த வேண்டும். அப்போதுதான் நாம் வளர்ச்சி காண முடியும். ஒவ்வொரு வேலையிலும் கவனத்தை செலுத்தி, ஆராய்ந்து, தெளிவோடு செயல்பட வேண்டும்.

பல துறைகளில் வேலை செய்யும்போது பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

வேலைக்காக செல்லும் இடத்தில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். செய்யும் வேலைக்கு தகுந்தவாறு உடை அணிந்து புன்னகை நிறைந்த முகத்துடன் பணியாற்ற வேண்டும். அனைத்து இடங்களிலும் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் பணியிடத்தில் பாதுகாப்பு, சம உரிமை போன்றவை வழங்கப்படுகிறதா? தாங்கள் செய்யும் வேலை தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.

சொத்து மேலாண்மை பற்றி சொல்லுங்கள்?

ஒருவர் தன்னிடம் உள்ள இடம், வீடு அல்லது வணிக கட்டிடங்கள் ஆகியவற்றை பராமரிப்பதற்காகவும், சரியான முறையில் நிர்வகிப்பதற்காகவும் சொத்து மேலாண்மை வல்லுனரிடம் ஒப்படைப்பார்.இவ்வாறு உரிமையாளர் வீட்டை ஒப்படைத்த பின்னர் அதை சீரமைத்து, பராமரித்து, நிர்வகிக்கும் வேலையை சொத்து மேலாண்மை வல்லுநர்கள் செய்து வருவார்கள்.

பெண்கள் இந்த துறையில் பயணிக்க உங்களுடைய ஆலோசனை என்ன?

சொத்து மேலாண்மை துறையில் தற்போது 10 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். ஆண்களைவிட, பெண்களுக்கே வீடு, நிலம் ஆகியவற்றின் மீது ஈர்ப்பும், ஈடுபாடும் அதிகமாக இருக்கும். ஆண், ஒரு வீட்டை மேற்பார்வையிடும்போது அதன் பரப்பளவு, அதில் இருக்கும் அறைகள், வசதிகள் ஆகியவற்றை மட்டுமே பெரும்பாலும் கருத்தில் கொள்வார். ஆனால் பெண்கள் தண்ணீர் வசதி, சாலை வசதி, பிள்ளைகளின் பாதுகாப்பு, வாஸ்து, சமையலறை, வீட்டின் வெப்பநிலை, காற்றோட்டம், வெளிச்சம் என வாழ்வதற்கு தகுதியானதாக அந்த வீடு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்ப்பார்கள். பயத்தைக் கடந்து வந்தால்தான் பெண்கள் எந்த துறையிலும் கால் பதிக்க முடியும். குறிப்பாக சொத்து மேலாண்மை துறையில் பணம் கொடுக்கல்-வாங்கல், நீண்ட தூரம் பயணம், அணுகுமுறை போன்ற பல விஷயங்கள் இருப்பதால், அதற்கு தகுந்த வகையில் பெண்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

சொத்து சார்ந்து பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன?

சொத்து பற்றிய அடிப்படையான விஷயங்களை மட்டும் தெரிந்துகொள்வது போதுமானதுதான். இடத்தின் மதிப்பு, மார்க்கெட் மதிப்பு, அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் மற்றும் பட்டா விவரங்கள், தெளிவான பெயர், முகவரி, கூட்டுப் பத்திரம், இதர பத்திரங்கள் பற்றிய சட்டப் பூர்வமான தகவல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது தவிர அடிப்படை வசதிகள், போக்குவரத்து, பாதுகாப்பு போன்றவை குறித்த விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பது சொத்து மேலாண்மை துறையில் உங்களுக்கான தனி இடத்தை பெற்றுத் தரும்.

பெண்கள் சொத்து வாங்கும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன?

பெண்கள், சொத்து வாங்கும்போது 50 சதவீத தொகை அல்லது முழுத்தொகையையும் செலுத்தி வாங்க வேண்டும். குறைந்த முன்பணம் செலுத்தி சொத்து வாங்கும்போது நேரமும், பணமும் விரயமாகும். கட்டிடத்தை மட்டும் வாங்காமல், கட்டிடத்தைச் சுற்றி வெற்றிடமும், தோட்டமும் இருப்பதுபோல வாங்க வேண்டும். இதன் மூலம் காற்றோட்டமும், வெளிச்சமும் நிறைந்த இயற்கையான சூழலில் வாழ முடியும். எதிர்காலத்தில் வீட்டை விரிவுப்படுத்தவும் வசதியாக இருக்கும். அடிப்படை வசதிகள், சரியான சான்றிதழ்கள் இல்லாத மற்றும் வில்லங்கம் நிறைந்த சொத்துக்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

சொத்து மேலாண்மை துறையில் பெண்கள் வெற்றிகரமாக செயல்பட உங்கள் ஆலோசனைகள் என்ன?

ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே சொத்து மேலாண்மை துறையில் வெற்றி அடைய முடியும். சுமூகமான பேச்சுவார்த்தை என்பது எல்லா துறையிலும் அவசியமான ஒன்றாகும். இதுவே நாம் அந்த துறையில் நீண்ட தூரம் பயணிக்க உதவும். அடுத்ததாக, சந்தை பற்றிய தெளிவுநிலை இருக்க வேண்டும். சொத்து மேலாண்மை துறையில் கட்டிட பொறியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். எடுத்தவுடன் பெரிய சொத்துக்களை விற்கும், நிர்வகிக்கும் அல்லது பராமரிக்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும். சிறு சிறு நுகர்வோரை முதலில் அணுகி, அவர்களின் தேவைக்கு ஏற்றபடி சொத்துக்களை வாங்கி, விற்க வேண்டும். 'இவரை அணுகினால் வேலையை சுமூகமாக முடித்து கொடுப்பார்' என்று நுகர்வோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். சொத்து மேலாண்மைத் துறையை பொறுத்தவரை முதலீடு என்பது தேவை இல்லை.

உங்களுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் என்ன?

'சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருது', 150-க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட குழுவை நிர்வகித்ததன் அடிப்படையில் 'சிறந்த தலைவருக்கான விருது' உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.


Next Story