இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 22 Oct 2023 1:30 AM GMT (Updated: 22 Oct 2023 1:30 AM GMT)

நீங்கள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்தது தவறல்ல. ஆனால் உங்களுடைய தேர்வு சரியானதாக தெரியவில்லை. உங்கள் மாமியார் உங்களை நடத்தும் விதம் குறித்து, உங்கள் கணவர் புரிந்துகொள்ளாததும், அவரிடம் இருந்து உங்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்காமல் இருப்பதும் தவறாகும்.

1. திருமணமாகி 4 வருடங்கள் ஆகியும் இதுவரை எனக்கு குழந்தைப்பேறு இல்லை. திருமணமான நாளில் இருந்தே எனது பாட்டி, அம்மா, மாமியார் ஆகிய மூவரும் எங்களை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தி வருகிறார்கள். இதனால் நானும், எனது கணவரும் குழந்தை பிறப்புக்காக பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும் பெரியவர்கள், தங்களது உடல்நலத்தை காரணம் காட்டி எங்களை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்துவது, எங்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது. அவர்களை எதிர்த்துப் பேசவும் முடியவில்லை. இந்த சூழ்நிலையை நாங்கள் எப்படி கையாள்வது?

எல்லாவற்றையும் உங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் பேசுவதையோ அல்லது செய்வதையோ தடுப்பது என்பது உங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விஷயமாகும். அதேநேரம் எத்தகைய சூழ்நிலையையும் உங்களால் கையாள முடியும். நீங்கள் அவர்களை எதிர்த்துப் பேசுவதற்கு பதிலாக, குழந்தைப்பேறுக்காக நீங்கள் எடுத்துக் கொண்டு இருக்கும் நடவடிக்கைகள் பற்றி அவர்களுக்கு விளக்குங்கள். மருத்துவர் உங்களை அமைதியான சூழலில் இருக்குமாறு அறிவுறுத்தியிருப்பதாகவும், அதுவே நீங்கள் கருத்தரிப்பதற்கு உதவும் என்றும் அவர்களிடம் சொல்லுங்கள். குழந்தைப் பெற்றுக்கொள்வதைப் பற்றி அவர்கள் தொடர்ந்து பேசுவது, அந்த அமைதி நிறைந்த சூழலை உருவாக்கவில்லை. இதுவே குழந்தைப்பேறு தள்ளிப் போவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர்களிடம் தெரியப்படுத்துங்கள்.

2. காதல் திருமணம் செய்த எனக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. கணவருக்கு சரியான வேலை இல்லை. மாமியார், மாமனாரோடு வசித்து வருகிறோம். திருமணம் நடந்ததில் இருந்தே, என்னை எனது தாய் வீட்டுக்கு செல்ல கணவரின் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. தாய் வீட்டினரோடு எந்த வகையிலும் தொடர்புகொள்ள முடியாமல் இருக்கிறேன். என்னுடைய மாமியார் என்னை மிகவும் இழிவான நிலையில் நடத்துகிறார். கணவருக்காக அதை பொறுத்துக்கொள்கிறேன். ஆனால் என்னுடைய கணவர் இதைப் பற்றி எதுவும் கேட்பது இல்லை. தனிக்குடித்தனம் செல்வதற்கும் அவர் தயாராக இல்லை. இந்த நிலையில் இருந்து நான் எப்படி மீள்வது? வழிகாட்டுங்கள்.

நீங்கள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்தது தவறல்ல. ஆனால் உங்களுடைய தேர்வு சரியானதாக தெரியவில்லை. உங்கள் மாமியார் உங்களை நடத்தும் விதம் குறித்து, உங்கள் கணவர் புரிந்துகொள்ளாததும், அவரிடம் இருந்து உங்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்காமல் இருப்பதும் தவறாகும். உங்கள் பெற்றோரிடமிருந்து நீங்கள் எந்த ஆதரவையும் பெறுவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் உங்களை அங்கு அனுப்ப விரும்பவில்லை. திருமண வாழ்க்கையில் தியாகங்களும், சமரசங்களும் முக்கியம்தான். அதேநேரம் அது கணவன்-மனைவி இருவர் தரப்பிலும் இருக்க வேண்டும். உங்கள் கணவர் அவ்வாறு எதையும் செய்வது போல் தெரியவில்லை. நீங்கள் அவரிடம் மேலும் அதிக உறுதியோடு இருக்க வேண்டிய நேரம் இதுவாகும். உங்கள் சூழ்நிலை குறித்து அவரிடம் பேசுங்கள். அவர் பொருளாதார ரீதியில் வலுவாகும் வரை, உங்களுக்கு உங்கள் பெற்றோரின் ஆதரவு தேவை என்று அவருக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் நீண்ட காலத்திற்கு இந்த நிலையிலேயே வாழ முடியாது என்று அவருக்கு உணர்த்துங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in


Next Story