சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணடிக்கப்பட்டதால் ரூ.8 கோடி இழப்பு


சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணடிக்கப்பட்டதால் ரூ.8 கோடி இழப்பு
x

புதுவையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணடிக்கப்பட்டதால் ரூ.8 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணடிக்கப்பட்டதால் ரூ.8 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தணிக்கை அறிக்கை

கடந்த 2021 மார்ச் 31-ந்தேதியுடன் முடிந்த நிதியாண்டிற்கான யூனியன் பிரதேச தணிக்கை அறிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுப்பணித்துறை நீண்ட கால மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை தயாரிக்காததால் எதிர்பார்த்தபடி பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்க்க முடியவில்லை. மழைநீர் சேகரிப்பு அமைப்புமுறை மூலம் நிலத்தடி நீரை மறுசெறிவூட்டுதலில் பொதுப்பணித்துறை மற்றும் திட்ட அதிகாரி அமைப்புகளின் செயலாக்க நெறிமுறையில் குறைபாடு இருந்தது.

ரூ.8 கோடி இழப்பு

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டதால் தண்ணீர் 2-ம் நிலை உபயோகமின்றி வீணடிக்கப்பட்ட சம்பங்களாலும், 15.7 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக்கப்பட்டதாலும் அரசுக்கு ரூ.8 கோடியே 2 லட்சம் இழப்பு ஏற்பட்டது.

2016-17 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில் ரூ.212 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 13 புதிய பணிகளும், காரைக்காலில் ஒரு பணியும் முடிவுபெறவில்லை. 13 தரைமட்ட நீர்தேக்கங்களில் ஒரேயொரு நீர்தேக்கம் மட்டுமே தூர்வாரப்பட்டது. பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய குடிநீர் கட்டணம் ரூ.49.44 கோடி வசூலிக்கப்படவில்லை.

திட்ட பலன்கள் மறுப்பு

பிரதம மந்திரியின் வீட்டுவசதி திட்டத்தில் பயன்பெற 44 ஆயிரத்து 315 பேர் கண்டறியப்பட்டாலும் இரண்டு கூறுகள் செயல்படுத்தப்படாததால் சாத்தியமுள்ள 16 ஆயிரத்து 13 பயனாளிகளுக்கு திட்ட பலன்கள் மறுக்கப்பட்டன. தகுதியில்லாத 1,175 ஆண் பயனாளிகள் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக மானியம் பெற தேர்வு செய்யப்பட்டனர்.

ரெட்டியார்பாளையத்தில் வீடுகள் கட்டுமான திட்டத்தை முடிப்பதில் ஏற்பட்ட அளவு கடந்த காலதாமதத்தின் காரணத்தால் 464 குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் ரூ.16.44 கோடி பயனற்ற முதலீட்டில் முடிந்தது. மாகி கடலோர காவல்நிலையம் கட்டப்படாததால் ரூ.81.86 லட்சம் நிதி முடக்கப்பட்டதோடு, அல்லாமல் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தவும் தவறியது.

இவ்வாறு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story