புதுவையில் இன்று அறிவித்த முழுஅடைப்பு வாபஸ்


புதுவையில் இன்று அறிவித்த முழுஅடைப்பு வாபஸ்
x

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக புதுவையில் இன்று நடைபெற இருந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் ஆனது.

புதுச்சேரி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக புதுவையில் இன்று நடைபெற இருந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் ஆனது.

2 நாட்கள் 'பந்த்'

பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து புதுவையில் நாளை (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து அறிவித்தன. இதேபோல், இந்துக்களை இழிவாக பேசிய தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட 30 அமைப்புகள் இணைந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்கள் 'பந்த்' அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

புதுவையில் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஒருவார விடுமுறைக்கு பின் நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற உள்ளது. சமூக அமைப்புகள் அறிவித்துள்ள போராட்டத்தினால் மாணவர்கள் பள்ளி செல்வதற்கு சிரமம் ஏற்படும் என்று பொதுமக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே பொதுமக்களின் நலன் கருதி முழு அடைப்பு போராட்டத்தினை வாபஸ் பெறுவது தொடர்பாக இரு தரப்பினரிடமும் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் வல்லவன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் 2-வது நாளாக சமூக அமைப்புகளுடன் கலெக்டர் வல்லவன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன், பெரியார் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன் உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வேண்டுகோள்

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வல்லவன், முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே போராட்டத்தினை வாபஸ் பெறுவது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இந்து முன்னணி அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதற்கு என்ன தீர்வு? அவர்கள் போராட்டம் நடத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாதா? என வாதிட்டனர்.

வாபஸ்

அப்போது பேசிய மாவட்ட கலெக்டர், அவர்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினால், உரிய நடவடிக்கை எடுப்பதுடன் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட சமூக அமைப்புகள், நாளை (திங்கட்கிழமை) நடைபெறுவதாக இருந்த முழு அடைப்பு போராட்டத்தினை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், தேவைப்பட்டால் இன்னொரு நாளில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தனர்.


Next Story