பிரதமருக்கு எதிரான புகார் என்றால் தேர்தல் ஆணையம் மிக மிக எச்சரிக்கையாக இருக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு


பிரதமருக்கு எதிரான புகார் என்றால் தேர்தல் ஆணையம் மிக மிக எச்சரிக்கையாக இருக்கிறது:  காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

பிரதமர் மோடி பேசியது தேர்தல் நன்னடத்தை விதிகள், சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக அமைந்துள்ளன என தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ராஜஸ்தானில் சமீபத்தில் பிரதமர் மோடி பேசும்போது பிரிவினைவாத பேச்சுகளை வெளியிட்டார் என குற்றஞ்சாட்டி, பல எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார்களை அளித்தன. இதற்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையமும், பா.ஜ.க.விடம் கேட்டு கொண்டுள்ளது.

இதேபோன்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பேசிய பேச்சுகளை சுட்டி காட்டி அவர்களுக்கு எதிராக, பா.ஜ.க. சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதற்கு பதிலளிக்கும்படி, காங்கிரஸ் கட்சியிடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

இந்த புகார்கள் மீது என்ன வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த காங்கிரஸ் தகவல் தொடர்புக்கான பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறோம். பிரதமர் மோடி பேசியது தேர்தல் நன்னடத்தை விதிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக அமைந்துள்ளன என அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

இதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. வாக்குகளுக்காக, சில வேட்பாளர்கள் மதங்களை தவறாக பயன்படுத்துவது பற்றியும் புகாரளித்து இருக்கிறோம். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். எங்களுக்கு வந்த நோட்டீசுக்கும் நாங்கள் பதிலளிப்போம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங்குக்கு எதிராக எந்தவித புகாரும் இல்லை என சுட்டி காட்டியதுடன், பிரதமருக்கு எதிராக 2-வது முறையாக நாங்கள் புகார் அளித்து இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

உள்துறை மந்திரி பற்றியும் முன்பு புகார் அளிக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அசாம் முதல்-மந்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார். பல்வேறு கட்சிகளின் புகார்களை பாரபட்சமின்றி தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். எப்போது தேவையோ, அப்போது நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்றார்.

பிரதமருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும் என்று உங்களுடைய கட்சி உணருகிறதா? என்பது பற்றி கேட்டபோது அவர், பிரதமர் என வரும்போது, அவர்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்கின்றனர். உள்துறை மந்திரி என்றால், அவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

எனினும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் கூறும்போது, எந்தவொரு பிரதமருக்கு எதிராகவும் தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது என்பது இதுவே முதல்முறையாகும் என தெரிவித்தனர்.

எனினும் தேர்தல் ஆணையம், இரு கட்சி தலைவர்களை சேர்ந்த மோடி, ராகுல் காந்தி அல்லது கார்கே ஆகியோருடைய பெயர்களை கடிதத்தில் நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால், அந்த கடிதங்களில் தனக்கு புகாராக வந்த ஆவணங்களை இணைத்து அனுப்பியுள்ளது. அவற்றில், 3 தலைவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.


Next Story