வாக்களிக்க லஞ்சம்.. வழக்கில் இருந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு விலக்கு கிடையாது- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி


தினத்தந்தி 4 March 2024 7:01 AM GMT (Updated: 4 March 2024 11:59 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

புதுடெல்லி:

சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் பேசுவதற்காகவும் வாக்களிப்பதற்காகவும் லஞ்சம் பெறுதல் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு விலக்கு கிடையாது என சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது, பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும். லஞ்சம் நாடாளுமன்ற சிறப்புரிமைகளால் பாதுகாக்கப்படவில்லை என்றும், 1998-ல் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் அம்சம் அரசியலமைப்பின் 105 மற்றும் 194 வது பிரிவுக்கு முரணானது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வழக்கு விவரம்:

1993-ம் ஆண்டு பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க லஞ்சம் பெற்றதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) தலைவர் சிபு சோரன் உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. ஆனால் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கடந்த 1998-ம் ஆண்டு ரத்து செய்தது.

அதாவது, நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள் சபைக்குள் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் எதிராக கிரிமினல் விசாரணையில் இருந்து அவர்களுக்கு விலக்கு இருப்பதாகவும், சட்டப்பிரிவு 105(2) மற்றும் 194(2) ஆகியவை அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிப்பதாகவும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

இந்த உத்தரவு தனக்கும் பொருந்தும் என கூறி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏ.வும், சிபு சோரனின் மருமகளுமான சீதா சோரன், 2019ல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தபோது, இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக கிளம்பியது.

1998-ல் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்புக்கொண்டது. இது அரசியல் நெறிமுறைகள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான பிரச்சினை என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது. முதலில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதன்பின்னர், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்றது. விசாரணை கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி நிறைவடைந்தது.

1998ல் வழங்கப்பட்ட தீர்ப்பை 25 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றும் வகையில் இப்போது 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. பி.வி.நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், லஞ்சம் வாங்கும் உறுப்பினர்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கக்கூடிய அந்த தீர்ப்பை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.


Next Story