தலையங்கம்

மத்தியில் 'கிங்மேக்கர்'; ஆந்திராவில் சாதனையாளர்!


மத்தியில் கிங்மேக்கர்; ஆந்திராவில் சாதனையாளர்!
18 Jun 2024 12:59 AM GMT

மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைக்க கிங் மேக்கராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திகழ்கிறார்.

மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி 3-வது முறையாக ஆட்சியமைத்து இருக்கிறார். 2014-ல் முதல் முறையாக ஆட்சியமைத்தபோது, அதற்கு தேவையான 272 இடங்கள் என்பதையும் தாண்டி தனிப்பெரும்பான்மையுடன் 282 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது. 2019-ல் 2-வது முறையாக ஆட்சியமைத்தபோது வெற்றி எண்ணிக்கை 303 ஆக அதிகரித்தது. நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் அதையும் தாண்டி அமோக வெற்றி பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் கணிப்புகளும் அதையே உறுதிப்படுத்தின. ஆனால், எல்லோருடைய மனக்கணக்கும் தவறாகிவிட்டது. பா.ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையை பெறவில்லை. அக்கட்சிக்கு 240 இடங்களில்தான் வெற்றி கிடைத்தது. அதே நேரத்தில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியதால், ஆட்சியமைக்க அது போதுமானதாக இருந்தது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளிலும், அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உதவிகரமாக இருக்கிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 2 இடங்களில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தபோதும், ராமருக்கு அணில் உதவியதுபோல கூட்டணிக்கு உதவிகரமாக இருந்தது. ஆக, மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைக்க கிங் மேக்கராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திகழ்கிறார். அதற்கு பரிசாக மத்திய மந்திரிசபையில் அவரது கட்சிக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் இந்த நாடாளுமன்ற தேர்தலோடு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 175 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜனதா கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறது. நமக்குத்தான் அசைக்கமுடியாத அறுதிப் பெரும்பான்மை இருக்கிறதே, தனியாக மந்திரிசபையை அமைக்கலாமே என்று சந்திரபாபு நாயுடு நினைக்காமல், கூட்டணி கட்சிகளையும் சேர்த்து மந்திரிசபை அமைத்துள்ளார். ஜன சேனா கட்சியில் பவன் கல்யாணுக்கு துணை முதல்-மந்திரி பதவியும், மேலும் 2 பேருக்கு மந்திரி பதவியும், பா.ஜனதா கட்சியில் ஒருவருக்கு மந்திரி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு ஆந்திரா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் 4-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார். பதவியேற்றவுடன் 5 கோப்புகளில் கையெழுத்து போட்டுள்ளார். 16,347 ஆசிரியர்கள் நியமனம், நில உரிமை சட்டம் ரத்து, சமூக பாதுகாப்பு திட்டத்தில் முதியோர் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியத் தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்குதல் என்பதுடன், வேலைவாய்ப்பை வழங்குவதற்காக திறன் தொடர்பான கணக்கெடுப்பு நடத்துதல், ரூ.5-க்கு தரமான சாப்பாடு வழங்கும் அண்ணா உணவகத்தை மீண்டும் திறத்தல் ஆகிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டு முதல் நாளிலேயே சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே, ஆந்திரா ரூ.5 லட்சம் கோடி கடனில் தத்தளித்துக்கொண்டு இருக்கும்போது, தேர்தல் வாக்குறுதிகளான 'சூப்பர் சிக்ஸ்'-ஐ நிறைவேற்ற ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இனி எப்படி சமாளிக்கப்போகிறார்? என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.