குழந்தைகள் உள்பட 5 பேரை வீட்டுக்குள் 2 மணிநேரம் திணறடித்த சிறுத்தைப்புலி


குழந்தைகள் உள்பட 5 பேரை வீட்டுக்குள் 2 மணிநேரம் திணறடித்த சிறுத்தைப்புலி
x

ராஜஸ்தானில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொண்ட குடும்பம் வசித்து வந்த வீட்டுக்குள் சிறுத்தைப்புலி ஒன்று திடீரென நுழைந்துள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரில் மாளவியா நகர் தொழிற்பேட்டை பகுதி உள்ளது. இதனருகே உள்ள வன பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி ஒன்று வழி தவறி இன்று காலை 8 மணியளவில் இந்த பகுதிக்குள் நுழைந்து விட்டது. பின்பு, அந்த பகுதியில் இருந்த தொழிற்சாலை ஒன்றிற்குள் முதலில் புகுந்தது.

இதுபற்றி அறிந்த வன துறை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று 9 மணியளவில் சம்பவ பகுதிக்கு வந்தது. ஆனால், அதற்குள் பிர்லா தொழில் நுட்ப மையத்திற்குள் அது சென்று விட்டது.

இந்த தகவல் பரவியதும், அந்த கல்லூரியில் அச்சம் தொற்றி கொண்டது. கல்லூரி வளாகத்திற்குள் அது நுழைந்ததும் போலீசார் மற்றும் வன துறை அதிகாரிகள் உடனடியாக விரைந்து சென்றனர். அந்த பகுதியை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன்பின், அதனை பிடிக்கும் முயற்சியாக மயக்க ஊசி செலுத்த முடிவு செய்து அதிகாரிகள், அதன் மீது துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் குறி தவறியது. கணேஷ் பிரஜாபத் என்ற காவலர் மேல் பாய்ந்து அவரை கடுமையாக தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்திருக்கிறார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சூழலில், தொழிற்சாலை அருகே இருந்த வீட்டுக்குள் அந்த சிறுத்தைப்புலி நுழைந்துள்ளது. அந்த வீட்டில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொண்ட குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது.

சிறுத்தைப்புலி நுழைந்தது தெரிந்ததும், உடனடியாக அவர்கள் அறை ஒன்றிற்குள் பாதுகாப்பாக சென்று உட்புறம் பூட்டி கொண்டனர். அந்த வீட்டின் உள்ளேயே அது சுற்றி திரிந்தது.

இதனையறிந்து, அதிகாரிகள் குழு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டது. அதனை நோக்கி துப்பாக்கியால், 3 முறை சுட்டனர். இதில், 2-வது முறை சுட்டதில் சிறுத்தைப்புலி அரைமயக்கத்திற்கு சென்றது.

அடுத்து ஒரு மயக்க ஊசி செலுத்தப்பட்டதும், அது முற்றிலும் சுயநினைவை இழந்தது. இதன்பின்னர், அதனை அதிகாரிகள் பிடித்தனர். 2 மணிநேரம் அச்சத்துடன், அறைக்குள் பூட்டியபடி இருந்த அந்த குடும்பத்தினரையும் பாதுகாப்பாக மீட்டனர்.


Next Story