ராஜஸ்தான் காங்கிரசில் நீடிக்கும் குழப்பம்; இரு தரப்புக்கும் சோனியா காந்தி அழைப்பு


ராஜஸ்தான் காங்கிரசில் நீடிக்கும் குழப்பம்;  இரு தரப்புக்கும் சோனியா காந்தி அழைப்பு
x

அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 80 பேர் மற்றும் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேரும் டெல்லி வருமாறு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிட விரும்பவில்லை. இதனால் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து சசிதரூர் களம் இறங்க உள்ளார். எனினும் அசோக் கெலாட், காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசி என்பதால் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கட்சியில் 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற அடிப்படையில் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியில் இருந்து அவர் விலகுவார் என கூறப்படுகிறது. இதனை நேற்று அசோக் கெலாட் சூசகமாக கூறினார். இதுதொடர்பாக பேட்டி அளித்த அவர், 40 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் சாசன பதவிகளை வகித்து விட்டேன். இப்போது புதிய தலைமுறையினர் வாய்ப்பை பெற வேண்டும் என்பதே எனது எண்ணம் என்றார்.

இதனால் மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரி ஆவதற்கு சச்சின் பைலட் தீவிரம் காட்டி வருகிறார். அவருக்கு 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சச்சின் பைலட் புதிய முதல்-மந்திரி ஆவதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 80 பேர் மற்றும் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேரும் டெல்லி வருமாறு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story