9 நாட்களாக பகல்-இரவாக தர்ணா; முதல்-மந்திரி வீட்டை முற்றுகையிட அங்கன்வாடி ஊழியர்கள் முடிவு


9 நாட்களாக பகல்-இரவாக தர்ணா; முதல்-மந்திரி வீட்டை முற்றுகையிட அங்கன்வாடி ஊழியர்கள் முடிவு
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:45 PM GMT)

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகல்-இரவாக தர்ணா நடத்தி வரும் அங்கன்வாடி ஊழியர்கள் முதல்-மந்திரியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பெங்களூரு:

பிரச்சினைகள்

கர்நாடகத்தில் 63 ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சம்பள உயர்வு, தொடக்க பள்ளி ஆசிரியர் அந்தஸ்து, ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 23-ந்தேதி முதல் பெங்களூரு சுதந்திர பூங்காவில் பகல்-இரவாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் திறந்த வெளியில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள். அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஹாலப்பா ஆச்சார் அங்கு நேரில் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இலாகா மட்டத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை தீர்க்க உறுதியளித்தார். சம்பள உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறினார். ஆனால் தங்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று அங்கன்வாடி ஊழியர்கள் கூறியுள்ளனர்.

சம்பள உயர்வு

இந்த நிலையில் நேற்று 9-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் நீடித்தது. அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றை மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. அதாவது கர்நாடகத்தில் அங்கன்வாடி மையங்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படுகிறது. அந்த நேரத்தை குறைத்து அதாவது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அங்கன்வாடி மையங்களை திறந்திருந்தால் போதும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஒரு கோரிக்கையை நிறைவேற்றினால் போதாது, தங்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் பிடிவாதமாக கூறியுள்ளனர். அடுத்ததாக பெங்களூருவில் உள்ள முதல்-மந்திரியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.


Next Story