பா.ஜனதா உள்பட எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன்


பா.ஜனதா உள்பட எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன்
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா உள்பட கட்சி கடசிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன் என்று முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

பெங்களூரு, பிப்.1-

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மிகுந்த ஆச்சரியம்

எனக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட தகவலை கேட்டு நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். இந்த விருது எனக்கு கிடைக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இதை என்னால் நம்பவும் முடியவில்லை. இந்த விருது என்னை பொறுத்தவரையில் மிகப்பெரியது. எனது 65 ஆண்டுகால பொது வாழ்க்கை பயணம் சவால்கள் நிறைந்தவை. எனது பணிகளை பிரதமர் மோடி அங்கீகரித்துள்ளார்.

தேர்தலை மனதில் வைத்து எனக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருப்பதாக கூறுவது தவறு. இத்தகைய விருதுகள், சாதி, பகுதியை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுவது இல்லை. சமுதாய மாற்றத்திற்கு அளித்த பங்களிப்பு அடிப்படையில் தான் இத்தகைய உயர்ந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிகள் 2 பேரை அழைத்து பேசினேன். அவர்கள் காலையில் இருந்து சாப்பிடவில்லை என்று கூறினர். இதை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

2-வது பெரிய தவறு

-உடனே நிதித்துறை அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக ரூ.300 கோடி நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டேன். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, சட்டசபை தேர்தலை முன்கூட்டியே எதிர்கொள்வதற்காக 6 மாதங்களுக்கு முன்பே சட்டசபையை கலைத்தது மிகப்பெரிய தவறு என்பதை பிறகு உணர்ந்தேன். அதன் பிறகு மராட்டிய மாநில கவர்னர் பதவியை நான் ஏற்றது 2-வது பெரிய தவறு.

அதற்கு பதிலாக எதிர்க்கட்சி தலைவராக நான் பதவியில் நீடித்து இருக்க வேண்டும். அவ்வாறு இருந்திருந்தால் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது எல்லாம் நான் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன். பெங்களூருவில் உள்கட்டமைப்பு வசதிகளை உலக தரத்தில் மேம்படுத்தி இருப்பேன். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா அரசியல் ரீதியாக உறுதியாக உள்ளது. இந்தியா உறுதியான கரங்களில் உள்ளது.

சீன பிரச்சினை

சீனாவுடனான இந்தியாவின் பிரச்சினை 1962-ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கியது அல்ல. 1940-ம் ஆண்டுகளிலேயே இந்த பிரச்சினை தொடங்கிவிட்டது. நான் வெளியுறவு மந்திரியாக இருந்தபோது, இந்திய-சீன எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொண்டேன். ஆனால் சீனாவின் எல்லையை விரிவாக்கம் செய்யும் கொள்கையால் அது முடியாமல் போய்விட்டது.

பெங்களூருவில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதுகுறித்து முதல்-மந்திரிக்கும் கடிதம் எழுதினேன். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது மாநிலத்தின் பட்ஜெட் அளவு ரூ.40 ஆயிரம் கோடி. அதில் பெங்களூருவின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தேன். ஆனால் இன்று மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட் ரூ.2 லட்சம் கோடியை தாண்டிவிட்டது.

உள்கட்டமைப்பு வசதிகள்

ஆனால் பட்ஜெட் அளவு உயர்ந்ததற்கு ஏற்ப பெங்களூருவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது இரு கட்சிகளும் தலா 90 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய நிலையில் உள்ளன.

ஆனால் பிரதமர் மோடி தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தினால் அதன் பிறகு தேர்தல் களம் மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் அதிக வாக்குகளை பெற்று பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தீவிரமாக பணியாற்றி வருகிறார். நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். அதனால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா உள்பட எந்த கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன். எனக்கு தற்போது 90 வயதாகிறது. இந்த வயதுக்கு நான் மரியாதை அளிக்க வேண்டும். எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது.

இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.


Next Story