மியான்மரில் சிக்கி உள்ள மும்பையை சேர்ந்தவர்களை மீட்டு வர வேண்டும்- குடும்பத்தினர் கோரிக்கை


மியான்மரில் சிக்கி உள்ள மும்பையை சேர்ந்தவர்களை மீட்டு வர வேண்டும்- குடும்பத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

மியான்மரில் சிக்கி உள்ள மும்பையை சேர்ந்தவர்களை மீட்டு வர வேண்டும் என குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மும்பை,

மியான்மரில் சிக்கி உள்ள மும்பையை சேர்ந்தவர்களை மீட்டு வர வேண்டும் என குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மியான்மரில் சிக்கிய இந்தியர்கள்

தாய்லாந்து நாட்டில் வேலை, கவர்ச்சிகரமான சம்பளம் என்ற தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளின் ஆசை வார்த்தைளில் நம்பிச்சென்ற 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள மியாவாடி என்ற நகரில் சித்ரவதைக்கு ஆளாகி வருகின்றனர் என்ற தகவல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இது அவர்களது குடும்பங்களை பதற வைத்துள்ளது.

மியான்மரில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மும்பையை சேர்ந்த 70 போ்

இந்தநிலையில் மும்பையை சேர்ந்த சுமார் 70 பேர் மியான்மரில் சிக்கி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மியான்மரில் சிக்கிய மும்பையை சேர்ந்த ஒருவர், அவரது நண்பரை தொடர்பு கொண்டு அவருக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியுள்ளாா். இதையடுத்து அந்த நபரின் நண்பர் மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து மும்பை போலீசார் மியான்மரில் சிக்கிய உள்ள மும்பைவாசிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மோசடி கும்பல் தாய்லாந்து நாட்டில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி நாடு முழுவதும் இருந்து பலரை அழைத்து சென்று உள்ளனர். ஆனால் அந்த கும்பல் இந்தியர்களை மியான்மருக்கு அழைத்து சென்று சைபர் கிரைம்குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத்தி உள்ளனர். மியான்மரில் மும்பையை சேர்ந்த 70 பேருக்கு மேல் சிக்கி இருப்பதாக எங்களுக்கு புகார் வந்து உள்ளது. ஆனால் போலீசாருக்கு இதுவரை அங்கு சிக்கி உள்ள 3 ேபர் குறித்து தான் தகவல் கிடைத்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

குடும்பத்தினர் கோரிக்கை

மியான்மர் சம்பவத்தை எடுத்து வெளிநாட்டுக்கு வேலை செல்பவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதில் வேலைக்கு செல்லும் நிறுவனம் குறித்த விவரங்களை சரிபார்த்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையே மியான்மரில் சிக்கி உள்ள மும்பைவாசிகளை மீட்டு வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை துரிதமாக செயல்பட்டு மியான்மரில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


Next Story