அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்தேன்- ஏக்நாத் கட்சே தகவல்


அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்தேன்- ஏக்நாத் கட்சே தகவல்
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:45 PM GMT)

அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்ததாக ஏக்நாத் கட்சி ஒப்புக்கொண்டு உள்ளார்.

மும்பை,

அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்ததாக ஏக்நாத் கட்சி ஒப்புக்கொண்டு உள்ளார்.

அமித்ஷாவை சந்திக்க முயற்சி

தேவேந்திர பட்னாவிசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தான், ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஏக்நாத் கட்சே மீண்டும் பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் பரவின. இதுதொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஜல்காவில் நடந்த கூட்டத்தில் பேசும் போது, ஏக்நாத் கட்சே, பா.ஜனதா எம்.பி.யாக உள்ள மருமகள் ரக்சா கட்சேவுடன் அமித்ஷாவை சந்தித்ததாக கூறினார். மேலும் அவர், ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் சேர்ந்த போதும், தொடர்ந்து அவர் அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்து வருகிறார், என்றார்.

இந்தநிலையில் ஏக்நாத் கட்சே அமித்ஷாவுடன் போனில் பேசியதாக தகவல்கள் கிடைத்து உள்ளன.

சந்திக்கவில்லை

இதற்கிடையே அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்ததை ஏக்நாத் கட்சே உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறுகையில், "அமித்ஷாவை சந்திக்க திட்டமிடும் முன் அதுகுறித்து சரத்பவாரிடம் விரிவாக கூறினேன். ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக தான் அமித்ஷாவை சந்திக்க போவதாக அவரிடம் கூறினேன். அவரும் நான் அமித்ஷாவை சந்திக்க எந்த ஆட்சேபனையும் தொிவிக்கவில்லை. ஆனால் நான் அமித்ஷாவை சந்திக்கவில்லை.

பா.ஜனதாவில் சேர மாட்டேன்

அதேபோல நான் பா.ஜனதாவில் மீண்டும் சேர வாய்ப்பே இல்லை. மூத்த பா.ஜனதா தலைவர்கள் என்னை துன்புறுத்தினர். சில நேரங்களில் எனது உயிருக்கே ஆபத்து இருந்தது. எனக்கு சம்மந்தம் இல்லாத போதும், என் மீது மட்டுமில்லாமல் என் மனைவி, மருமகன் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்தனர்.

நான் தேசியவாத காங்கிரசில் மகிழ்ச்சியாக உள்ளேன். பல தடைகள் வந்த போதுகூட நான் எம்.எல்.சி.யாக சரத்பவார் காரணமாக இருந்தார்." என்றார்.


Next Story