கார் மீது லாரி மோதி 3 பேர் பலி- ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்


கார் மீது லாரி மோதி 3 பேர் பலி- ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 30 Nov 2022 6:45 PM GMT (Updated: 30 Nov 2022 6:46 PM GMT)

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.

வசாய்,

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.

கார் மோதி விபத்து

கல்யாணை சேர்ந்தவர் சத்யநாராயண் (வயது80). இவரது மனைவி சுமத்ரா (78), மகன் தீபக் (58), பேரன் கேத்தன் (25) உள்பட 5 பேர் தாத்ராநகர் ஹைவேலி கான்வெல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் கல்யாண் நோக்கி காரில் புறப்பட்டு மும்பை நோக்கி வந்தனர்.

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை சாரோட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் தானிவாரி என்ற இடத்திற்கு கார் வந்தது. அப்போது முன்னால் சென்ற காரை டிரைவர் முந்த முயன்றார். அப்போது எதிர்சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

3 பேர் பலி

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியதால் அதில் இருந்த 5 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த சாரோட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்த 5 பேரை மீட்டனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காயமடைந்த 3 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு வரும் வழியிலேயே மற்றொருவர் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடிக்கடி விபத்து

இதையடுத்து விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி நடத்திய விசாரணையில் பலியானவர்கள் சத்யநாராயணா, மனைவி சுமத்ரா, மகன் தீபக் ஆகியோர் என்பது தெரியவந்தது.

சமீபத்தில் தொழில் அதிபர் சைரஸ் மிஸ்திரி பலியான இடத்தில் இருந்து சில கி.மீ. தொலைவில் தான் இந்த விபத்து நடந்து உள்ளது. அடிக்கடி விபத்து நடைபெறும் பகுதி என்பதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லும்படி எச்சரிக்கை பலகை வைக்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story