பள்ளி மாணவர்கள் கல்வி பயில 14 வகையான நலத்திட்டங்கள்


பள்ளி மாணவர்கள் கல்வி பயில 14 வகையான நலத்திட்டங்கள்
x

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில 14 வகையான நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில 14 வகையான நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

14 வகையான நலத்திட்டங்கள்

வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இடையில் நிற்பது என்பது சில பகுதிகளில் நிலவி வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு செல்கிறார்கள். மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில 14 வகையான நல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில 3 முதல் 5-ம் வகுப்பு வரை 500 ரூபாய், 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகை ஆண்டொன்றுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்க ஆண்டொன்றுக்கு 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 500 ரூபாய், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1,000 ரூபாய்,, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1,500 ரூபாய், 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் கல்வி உதவித்தொகையும், சிறுபான்மையினர் மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இடைநிற்றல் இல்லாமல்

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் கல்வி பயின்று கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில புதுமை பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு கொடுக்கப்படுகிறது. மாணவர்கள் பசியின்றி கல்வி பயில அனைத்து அரசு, நகராட்சி, அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவிகள் இடைநிற்றல் காரணமாக குழந்தை திருமணங்கள் நடக்கிறது. குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமாகும். இதில், தொடர்புடைய பெற்றோர்கள் உள்பட அனைவரும் குற்றவாளிகள் ஆவர். வளமான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க மாணவ-மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில பெற்றோர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story