2 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்


2 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 1 Feb 2023 9:57 AM GMT)

நாகையில் கடல் சீற்றமாக காணப்படுவதால் 2 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாகப்பட்டினம்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காற்று வழக்கத்தை விட வேகமாக வீசியது. மதியத்துக்கு மேல்பலத்த காற்று வீசியதால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர். மேலும் நாகையில கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.மேலும் கடல் சீற்றத்தால், காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனவும், இதனால் முதல் கட்டமாக மீனவர்கள் இன்றும்(புதன்கிழமை), நாளையும்(வியாழக்கிழமை) 2 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர். மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கரை திரும்ப அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story