காஞ்சீபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றம்


காஞ்சீபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றம்
x

காஞ்சீபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம்

மாநகராட்சி கூட்டம்

காஞ்சீபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாநகராட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை மேயர் வாசிக்க மாநகராட்சி உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

பிறகு மாநகராட்சி அதிகாரி ஒவ்வொரு தீர்மானங்களை வாசிக்க தொடங்கி அதில் உள்ள நிறை, குறைகளை உறுப்பினர்கள் விவாதித்தனர்.

கடந்த பருவ மழையின் போது காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் அதிக அளவு சேதம் ஏற்பட்டது. எனவே புதிய தார் சாலைகள் அமைக்க உறுப்பினர்கள் அதிக அளவில் கூறியதன் பேரில் சாலை பணிகள் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் மாநகராட்சியில் சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்த மற்றும் அஸ்திவாரம் பலவீனமாக உள்ளதாக புகார் வருவதால் அதனை சரி செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

63 தீர்மானங்கள்

அம்மா உணவகத்தில் புதை வடிகால் இணைப்பு பழுது நீக்குதல், குடிநீர் தேவைகளுக்கான மின்மோட்டார் பராமரிப்பு, திடக்கழிவு வாகனங்கள் பராமரிப்பு, தகுதி சான்றிதழ் பெறுதல், மாவட்ட நூலகங்களுக்கு இடம் அளித்தல் தொடர்பான தீர்மானம், அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தை இடித்துவிட்டு நவீன முறையில் புதிதாக கட்டுதல், ஜவகர்லால் காய்கறி சந்தைக்கு புதிய கட்டிடம் கட்டுதல், பொதுமக்கள் கழிப்பிடம் புனரமைத்தல், கீழ்கேட் பகுதியில் உள்ள தாமரை குளத்திற்கு மழைநீர் சேகரிப்பு வாய்ப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 63 தீர்மானங்கள் ஏகமனதாக மாமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மக்கள் நலப்பணிகளை தொய்வின்றி மாமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும், தேவைப்படும் பணிகள் குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கும் போது அவசரம் கருதி சில பணிகள் விரைவாக மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.


Next Story