மணி காட்ட மறுக்கும் மணிக்கூண்டு


மணி காட்ட மறுக்கும் மணிக்கூண்டு
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

கோவை டவுன்ஹாலில் மணி காட்ட மறுக்கும் மணிக்கூண்டை பழுது நீக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை டவுன்ஹாலில் மணி காட்ட மறுக்கும் மணிக்கூண்டை பழுது நீக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பழமை வாய்ந்தது

கோவையின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது டவுன்ஹாலில் உள்ள மணிக்கூண்டு. இந்த மணிக்கூண்டு அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதாக கூறுவது உண்டு. இந்த மணிக்கூண்டில் உள்ள மணி லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டது ஆகும். இதில் காட்டப்படும் மணியை இந்த வழியாக செல்லும் பலர் பார்த்துச்செல்வது உண்டு. ஆனால் கடந்த சில வாரங்களாக மணிக்கூண்டில் மணி காட்டுவது இல்லை.

அது பழுதடைந்து விட்டதால், நேரத்தை காட்டாமல் ஒரே இடத்தில் நிற்கிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பழுதான மணிக்கூண்டை பார்த்துவிட்டு இது எப்போது சரிசெய்யப்படும் என்று கூறிவிட்டு செல்லும் நிலை நீடித்து உள்ளது. தற்போது இதை மாநகராட்சிதான் பராமரித்து வருகிறது. ஆனால் இதுவரை ஏன் இந்த மணிக்கூண்டை அவர்கள் சரிசெய்ய முன்வரவில்லை என்பது தெரியவில்லை.

சரி செய்ய வேண்டும்

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கோவை என்று இணையதளத்தில் டைப் செய்தாலே அதற்கு அடையாளமாக வருவது மணிக்கூண்டுதான். நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த மணிக்கூண்டால் கோவை இன்னும் அதிக பெருமை அடைகிறது. ஆனால் அதில் உள்ள பழுதடைந்த மணியை சரிசெய்ய ஏன் மாநகராட்சி தயங்குகிறது என்பதுதான் தெரியவில்லை.

டவுன்ஹாலில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் பலர் இன்னும் இந்த மணிக்கூண்டை பார்த்துதான் மணியை தெரிந்து கொள்கிறார்கள். அந்த அளவுக்கு மணிக்கூண்டு அனைவருக்கும் பயன்பெற்று வருகிறது. மேலும் இந்த வழியாக செல்லும் இளைஞர்கள் பலர் அதன் அருகில் நின்று செல்பியும் எடுப்பது உண்டு. அந்த அளவுக்கு பெருமை வாய்ந்த இந்த மணிக்கூண்டு நீண்ட நாளாக 1.45 என்று தான் நேரத்தை காட்டுகிறது. எனவே பழுதான இந்த மணியை உடனடியாக சரிசெய்து மீண்டும் அது மணியை சரியாக காண்பிக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story