திருத்துறைப்பூண்டியில், அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்


திருத்துறைப்பூண்டியில், அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

திருத்துறைப்பூண்டியில், அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில், அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில்வே கேட்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி விவசாய தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதி. விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிற்சாலைகளோ வேறு வருமானத்துக்கோ வசதி இல்லாதது இந்த பகுதி. திருத்துறைப்பூண்டியிலிருந்து மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, கோவை, மதுரை, சேலம், திருப்பூர், ஈரோடு, பெங்களூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல திருத்துறைப்பூண்டி ெரயில்வே கேட் கடந்து தான் செல்ல வேண்டும். வேறு பாதை இல்லை. திருத்துறைப்பூண்டி நகரத்தில் செல்லாமல் வேறு வழியில் செல்ல வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும்.

இதைப்போல மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சுற்றுலா தலங்களான வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர், மேலும் வேதாரண்யம், கோடியக்கரை, செல்லும் வாகனங்கள் மற்றும் வேதாரண்யம் பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உப்பு, காய்கறிகள், பூ வகைகள் அனைத்தும் திருச்சி, தஞ்சாவூர், பகுதிக்கு எடுத்துச் செல்ல இந்த ெரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டும்.

காத்திருக்கும் மக்கள்

ஆனால் இங்கு திருத்துறைப்பூண்டியை கடந்து செல்லும் ெரயில்களால் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் நீண்ட வரிசையில் வாகனங்களுடன் காத்திருக்கிறார்கள். திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியம்பள்ளிக்கு செல்லும் ரெயில், திருவாரூர் முதல் காரைக்குடி வரை செல்லும் ெரயில் மற்றும் செகந்திராபாத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் ெரயில், சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் ெரயில் மற்றும் சரக்கு ெரயில்கள் திருத்துறைப்பூண்டி பகுதியை கடந்து செல்வதால் ஒரு நாளில் 4 முதல் 5 முறை ெரயில்வே கேட் மூடப்படுகிறது.

மேம்பாலம்

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், ஆஸ்பத்திரிக்கு செல்பவர்கள் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் உயிருக்கு போராடுபவர்களை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் ரெயில்வே கேட் மூடும் போது வாகனங்களுடன் காத்திருப்பவர்கள் வெப்பம் தாங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் கட்டி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story