தராசில் 10 ரூபாய் நாணயங்களுடன் காந்தி வேடத்தில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த யோகா பயிற்சியாளர்


தராசில் 10 ரூபாய் நாணயங்களுடன் காந்தி வேடத்தில் வந்து யோகா பயிற்சியாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஈரோடு

தராசில் 10 ரூபாய் நாணயங்களுடன் காந்தி வேடத்தில் வந்து யோகா பயிற்சியாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

10 ரூபாய் நாணயங்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கப்பட்டது.

திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 61) என்பவர் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

அவர் கூறும்போது, "நான் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். ரிசர்வ் வங்கி அறிவித்தும் வங்கிகள் மற்றும் பொதுஇடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். எனவே 10 ரூபாய் நாணயங்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தேன். நான் ஏற்கனவே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர், ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுள்ளேன்", என்றார். அவரது வேட்பு மனுவில் திருத்தம் இருந்ததால் அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

காந்தி வேடம்

நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த அகிம்சா சோசியலிஸ்டு கட்சியை சேர்ந்த ரமேஷ் (42) என்பவர் காந்தியைபோல வேடமணிந்து கையில் தராசுடன் மனு தாக்கல் செய்ய வந்தார். அவர் வேட்பு மனுவுக்கு செலுத்த வேண்டிய கட்டணமான ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்களை தராசில் போட்டு எடுத்து வந்து செலுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "யோகா பயிற்சியாளரான நான் இதுவரை 9 தடவை தேர்தலில் போட்டியிட்டு உள்ளேன். 10 ரூபாய் நாணயங்களை எல்லா இடங்களிலும் வாங்க மறுப்பதால், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பத்து ரூபாய் நாணயங்களை தராசில் போட்டு எடுத்து வந்தேன்", என்றார்.


Next Story