பொய்கை வாரச்சந்தையில் கால்நடைகள் விற்பனை விறுவிறுப்பு


பொய்கை வாரச்சந்தையில் கால்நடைகள் விற்பனை விறுவிறுப்பு
x

பொய்கை கால்நடை சந்தையில் கறவை மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை

பொய்கை கால்நடை சந்தையில் கறவை மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. ரூ.2 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கால்நடை சந்தை

அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை தோறும் கால்நடை சந்தை நடக்கிறது. இந்த சந்தையில் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் உயர்ரக கறவை மாடுகள், சினைமாடுகள், காளை மாடுகள், ஆடுகள் விற்பனைக்காக வருகின்றன.

இவற்றை வாங்குவதற்காக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி,ஆந்திர மாநிலம் சித்தூர், பலமனேர் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து வியாபாரிகள் வருகின்றனர்.

பல நேரங்களில் கறவை மாடுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் மாடுகளின் உரிமையாளர்கள் லாபம் அடைகின்றனர்.

ஒரு கறவை மாட்டின் விலை ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

விறுவிறுப்பான விற்பனை

இந்த நிலையில் நேற்று நடந்த கால்நடை சந்தையில் சுமார் 1,200- க்கும் மேற்பட்ட காளை மாடுகள், சினை மாடுகள், கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் கால்நடைகளுக்கான தீவனம், கயிறு, மணி ஆகியவற்றின் விற்பனையும், காய்கறிகள் விற்பனையும் அமோகமாக இருந்தது.இரவு 9 மணி வரை சந்தையில் விறுவிறுப்பான விற்பனை இருந்ததால் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சந்தை நடத்தும் ஏலதாரர்களில் ஒருவரான வெங்கடேசனிடம் கேட்டதற்கு, ''பொங்கல் கழிந்த பிறகுதான் வாரச்சந்தை களைகட்டத் தொடங்கியுள்ளது. அதிக அளவில் விற்பனை நடைபெற்றது'' என்றார்.


Next Story