டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா ஆவூர் எஸ்.பி.நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை ஒட்டி அனுமதி பெறாமல் அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர் நடத்தி வந்த பார் உள்ளது. இந்த பாரில் டாஸ்மாக் கடை மதியம் 12 மணிக்கு திறக்கும் முன்பு வரை காலையிலிருந்து தாராளமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவூர் டாஸ்மாக் கடை ஒட்டியே அரசு மேல்நிலைப்பள்ளியும், அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது. அதனால் டாஸ்மாக் கடை வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு மது குடித்துவிட்டு போதையில் ஆபாச வார்த்தைகளால் வசைபாடி செல்லும் நபர்களால் இடையூறு ஏற்பட்டு வந்தது. அதேபோல டாஸ்மாக் கடையில் பள்ளி மாணவர்கள் மது பாட்டிலை வாங்கி அருந்துவதை அப்பகுதியினர் நேரில் பார்த்து கண்டித்துள்ளனர். எனவே ஆவூரில் அரசு பள்ளிக்கும், அரசு மருத்துவமனைக்கும் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கையை விடுத்து வந்தனர். இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் ஆவூர் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆவூர் எஸ்.பி.நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அனைவரும் டாஸ்மாக் கடையை இழுத்து மூடுவதற்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்களை மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஆவூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story