மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் தீவிர சோதனை; போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் தீவிர சோதனை; போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

ஜி 20 மாநாட்டு பிரதிநிதிகள் வருகை எதிரொலியாக மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். புராதன சின்ன பகுதிகளில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

தீவிர சோதனை

ஜி 20 மாநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கும் கருத்தரங்கம் நாளை (செவவாய்க்கிழமை) மற்றும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கிறது. இதில் 20 நாடுகளை சேர்ந்த 150 விருந்தினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். கருத்தரங்கில் கலந்து கொள்ள வரும் இவர்கள் வருகிற 1-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து கண்டுகளிக்க வருகை தர உள்ளனர்.

இதற்கிடையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாமல்லபுரம் வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களின் நுழைவு வாயில் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பைகள், உணவு பொருட்கள் என அனைத்தையும் தீவிரமாக சோதனைக்குள்ளாக்கிய பிறகே புராதன சின்னங்களுக்குள் செல்ல அனுமதித்தனர். இன்றும் இந்த சோதனை தொடர்கிறது.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

வெண்ணை உருண்டைக்கல், அா்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம் போன்ற பகுதிகளில் நடந்து சென்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், சுற்றுலா பயணிகளுக்கு பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

புராதன சின்ன நுழைவு வாயிலில் பாதுகாப்பில் உள்ள போலீசாரிடம் சுற்றுலா பயணிகளை தீவிரமாக பரிசோதித்த பின்னரே அவர்கள் சிற்பங்களை கண்டுகளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என்பதை தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு ஒத்திகை

நேற்று முதல் மாமல்லபுரம் வரும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் நகர நுழைவு வாயில் பகுதியில் தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டு நகருக்குள் வர அனுமதிக்கப்படுகிறது. வாகனங்களில் முழுமையாக சோதனை செய்யும் போலீசார், வாகன எண்களை குறித்து கொண்டு, வாகனங்களில் வருபவர்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்த பிறகே மாமல்லபுரம் நகருக்குள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் செல்ல அனுமதித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ஜி 20 மாநாட்டு பிரதிநிதிகள் சொகுசு பஸ் மூலம் வருகிற 1-ந்தேதி மாமல்லபுரம் வருவதால், நேற்று ஆளில்லா 5 காலி பஸ்களை புரதான சின்னங்கள் உள்ள சாலைகளில் ஓடவிட்டு எந்ததெந்த சாலைகளில் ஜி 20 மாநாட்டு விருந்தினர்களை அழைத்து செல்வது, பஸ்கள் நிறுத்துமிடம், அவர்கள் புராதன சின்னங்களை கண்டுகளித்த பிறகு அவர்களை எப்படி பாதுகாப்பாக அழைத்து சென்று பஸ்சில் ஏற்றுவது போன்றவைகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.


Next Story