தைபூசத்தையொட்டி பாரம்பரியபடி அரோகரா கோஷத்துடன் பழனிக்கு புறப்பட்ட நகரத்தார் காவடிகள்


தைபூசத்தையொட்டி பாரம்பரியபடி அரோகரா கோஷத்துடன் பழனிக்கு புறப்பட்ட நகரத்தார் காவடிகள்
x
தினத்தந்தி 31 Jan 2023 8:30 AM GMT (Updated: 31 Jan 2023 8:30 AM GMT)

பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் சிங்கம்புணாி வழியாக அரோகரா கோஷத்துடன் பழனிக்கு புறப்பட்டன

சிவகங்கை

சிங்கம்புணரி,

பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் சிங்கம்புணாி வழியாக அரோகரா கோஷத்துடன் பழனிக்கு புறப்பட்டன.

நகரத்தார்கள்

பாரம்பரியமிக்க நகரத்தார்கள் ஒன்றிணைந்து வருடம் தோறும் தைப்பூச திருவிழாவிற்கு பழனிக்கு காவடி தூக்கி சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருவது வழக்கம். பாரம்பரியமிக்க நகரத்தார்கள் காவடி கண்டனூர், அரண்மனை பொங்கல், நெற்குப்பை ஆகிய ஊர்களில் இருந்து புறப்பட்ட காவடிகள் குன்றக்குடி மையப் பகுதியாக வைத்து அங்கிருந்து புறப்பட்டு அரோகரா கோஷத்துடன் பழனி நோக்கி சென்றனா்.

அதனை தொடர்ந்து பிள்ளையார்பட்டியில் தரிசனம் செய்த நகரத்தார்கள் காவடியுடன் பாதை யாத்திரையாக திருப்பத்தூர் சாலை வழியாக சிங்கம்புணரி நோக்கி வந்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை சிங்கம்புணரி நகருக்கு வருகை தந்த காவடிகள் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு வந்தடைந்தன.

291 காவடிகள்

நகரத்தார்கள் காவடிகள் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 130 காவடிகளை சேர்த்து இந்தாண்டு 291 காவடிகள் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வந்தடைந்தது. திண்டுக்கல் சாலை வழியாக தங்கள் பாதயாத்திரையை தொடங்கினார்கள். சிங்கம்புணரி நான்கு ரோடு சந்திப்பில் பக்தர்கள் சூழ்ந்து நின்று காவடிக்கு உற்சாக வரவேற்பு அளித்து பக்தி பரவசத்துடன் அன்னதானம் வழங்கினா்.

நகரத்தார்கள் குன்றக்குடி, சிங்கம்புணரி, மனப்பச்சேரி, நத்தம், திண்டுக்கல் பகுதி வழியாக வருகிற தைப்பூச தினத்தன்று பழனி சென்று அடைவார்கள். தைப்பூசத் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.


Next Story