தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடியின் மத்திய அரசு - முத்தரசன் கண்டனம்


தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடியின் மத்திய அரசு - முத்தரசன் கண்டனம்
x
தினத்தந்தி 28 April 2024 1:41 PM GMT (Updated: 28 April 2024 1:49 PM GMT)

பிரதமர் மோடியின் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசு கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தையும், மக்களையும் வஞ்சித்து வருகின்றது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் மாநில அரசின் வருவாய் ஆதாரங்களை வெட்டிக் குறைத்தது. இழப்பீட்டு நிதி மேலும் சில ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது. நீட் நுழைவுத் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்க மறுத்து வருவது, மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பது.

அவசர கால தேவைக்கு மாநில அரசு கடன் வாங்க அனுமதி மறுப்பது என்று தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக மத்திய அரசு, தமிழ்நாடு இயற்கை பேரிடர் தாக்குதலால் பேரிழப்பை சந்தித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்த நேரத்தில் கரம் நீட்டி உதவாமல் உதாசினப்படுத்தி, அவதூறு பரப்பு அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செலில் ஈடுபட்டதை தமிழக மக்கள் ஒரு போதும் மறந்து விடமாட்டார்கள்.

மிக்ஜம் புயலும், பெருமழையும் தாக்குதல் நடத்தியது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, பாதுகாத்து, மறுவாழ்வுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ரூ2,477 கோடி செலவு செய்துவிட்ட நிலையிலும் மோடியின் பாஜக மத்திய அரசு இரக்கம் காட்ட முன்வரவில்லை. ரூ. 37 ஆயிரத்து 907 கோடி பேரிடர் கால சேதாரங்களை சீர்படுத்த தேவை என்ற கோரிக்கையை மத்திய அரசு அலட்சியம் செய்த நிலையில் தமிழக அரசு உதவி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தலையிடும் சூழலில் மத்திய அரசு மிக, மிக குறைவான சிறு தொகைக்கு அனுமதி வழங்கியிருப்பது, தமிழகத்தையும், மக்களையும் அவமதிக்கும் செயலாகும். பாஜக மத்திய அரசின் பாரபட்சம் காட்டி, பழிவாங்கும் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக தமிழக அரசு கோரியுள்ள ரூ.37 ஆயிரத்து 907 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story