நன்னியூர் பெண் ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம்


நன்னியூர் பெண் ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம்
x

ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகார் எதிரொலியாக நன்னியூர் பெண் ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நடவடிக்கை எடுத்தார்.

கரூர்

ஊராட்சி மன்ற தலைவர் புகார்

கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத்தலைவர் உள்பட 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த 5 உறுப்பினர்கள், அ.தி.மு.க.வை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என சம நிலையில் உள்ளனர். இந்தநிலையில் ஊராட்சி தலைவராக சுதா என்பவர் கடந்த 22-ந்தேதி வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், 9-வார்டு உறுப்பினர் நல்லுசாமி தனது கடமையை செய்ய விடாமல் குறுக்கீடு செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியும், சாதி ரீதியாக பாகுபாடு செய்து வருகிறார்.

மேலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி அடிக்கடி அலுவலகத்திற்கு வந்து அலுவலக பணியை செய்வதில் இடையூறு ஏற்படுத்தி வருகிறார். அலுவலக பணிக்கு ஊராட்சி செயலர் நளினி ஒத்துழைப்பு கொடுக்க வில்லை. அவரது கணவர் மூர்த்தி தேவையில்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வந்து, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்று கூறிக்கொண்டு ஊதியம் கேட்டு வருகிறார். மேற்கண்ட 4 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார். இதையடுத்து அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

பணியிடை நீக்கம்

இதையடுத்து நன்னியூர் ஊராட்சி செயலர் நளினியை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், அ.தி.மு.க. கவுன்சிலர் நல்லுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி, ஊராட்சி செயலர் நளினி மற்றும் அவரது கணவர் மூர்த்தி ஆகிய 4 பேர் மீது வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story