சமூக நல்லிணக்கத்தை அனைவரும் பேணிக் காக்க வேண்டும்; சட்டசபையில் முதல்-அமைச்சர் வேண்டுகோள்


சமூக நல்லிணக்கத்தை அனைவரும் பேணிக் காக்க வேண்டும்; சட்டசபையில் முதல்-அமைச்சர் வேண்டுகோள்
x

காவேரிப்பட்டணம் போன்று சம்பவம் இனியும் நடக்க கூடாது என்றும், அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் சமூக நல்லிணக்கத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசின் கவனத்தை ஈர்த்தார். அப்போது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டாம்பட்டியைச் சேர்ந்த ஜெகன் என்பரும், முழுக்கான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்பவரும் மூன்று மாதங்களுக்குப் முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இரு நாட்களுக்கு முன்பு ஜெகன் டைல்ஸ் வேலைக்குச் செல்லும்போது, பெண்ணின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில், பட்டப்பகலில் பொதுமக்கள் பலர் முன்னிலையில் சரமாரியாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

இதை அந்த வழியாக சென்ற பல பேர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் ஒளிபரப்பப்பட்டு, நாடெங்கும் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் எற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து கூறியதாவது:-

தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் காவல் நிலைய சரகம், கிட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெகன் (வயது 28) என்பவர், 21-ந்தேதி அன்று சுமார் 1.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் கே.ஆர்.பி. அணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முழுக்கான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சங்கர் உள்ளிட்ட மூவர், ஜெகனை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக, காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்த விசாரணையில், கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவியான சங்கரின் மகள் சரண்யாவை, டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான ஜெகன் காதலித்து, பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு அழைத்துச் சென்று, 26-1-2023 அன்று கோவிலில் வைத்துத் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற சங்கர் உள்ளிட்டோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சமூக நல்லிணக்கம்

சங்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலையில் சம்பத்தப்பட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர், அவதானப்பட்டி அ.தி.மு.க. செயலாளர் என்பது போலீசாரால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாதவண்ணம் உரிய நடவடிக்கைகளும், விழிப்புணர்வுப் பணிகளும் காவல் துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமூக நீதி காக்கும் மண்ணாக விளங்குகின்ற தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவண்ணம் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து மனிதநேய அடிப்படையில், சமூக நல்லிணக்கத்தைப் பேணிக் காத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சலசலப்பு

கைது செய்யப்பட்டவர் அ.தி.மு.க. செயலாளர் என்று சொல்லப்பட்டதற்கு அ.தி. மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் அ.தி.மு.க. செயலாளர் இல்லை என்று தெரிவித்தனர். அப்போது அவையில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், போலீசார் கொடுத்த தகவல்களை முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார். இல்லை என்று தெரிய வந்தால் மாற்றிக்கொள்ள போகிறோம். போலீஸ் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தான் சொல்கிறோம். இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது என்றார்.


Next Story