வளவனூர் போலீஸ் நிலையத்தை அதிமுக ஒன்றிய செயலாளரின் ஆதரவாளர்கள் முற்றுகை


வளவனூர் போலீஸ் நிலையத்தை அதிமுக ஒன்றிய செயலாளரின் ஆதரவாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:45 PM GMT)

வளவனூர் போலீஸ் நிலையத்தை அதிமுக ஒன்றிய செயலாளரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனா்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே நல்லரசன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பேட்டை முருகன். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரான இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த அவரது உறவினரான அ.தி.மு.க. கிளை செயலாளர் உதயசூரியன் தரப்புக்கும் இடையே கடந்த 28-ந் தேதியன்று தகராறு ஏற்பட்டு மோதிக்கொண்டனர். இதுகுறித்து உதயசூரியன் மகன் சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில் பேட்டை முருகன், அவரது ஆதரவாளர்களான மணிகண்டன், கலையரசன், ராஜி, கார்த்தி, பிரபாகரன் ஆகியோர் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், கலையரசன், ராஜி ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று பேட்டை முருகன் மனைவி பிரேமா மற்றும் அ.தி.மு.க.வினர், வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து திடீரென முற்றுகையிட்டனர். அப்போது உதயசூரியன் தரப்பு புகார் மீது மட்டும் நடவடிக்கை எடுத்த வளவனூர் போலீசாரை கண்டித்தும், தங்கள் தரப்பின் புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். பின்னர் பிரேமா முருகன், போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், எங்கள் குடும்பத்திற்கும், உதயசூரியன் குடும்பத்திற்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனால் அவர்கள் அவ்வப்போது எங்களை திட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு எங்களது வீட்டுக்கு வந்த உதயசூரியன், அவரது மகன்கள் சதீஷ்குமார், சரத்குமார், உறவினர் அய்யனார் உள்ளிட்டோர் எங்களை திட்டி ஆயுதங்களால் தாக்கினர். இதில் நானும், எனது உறவினர் சங்கர் உள்ளிட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றோம். எனவே நாங்கள் அளித்துள்ள புகாரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் பாலமுருகன், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story