இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது


இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது
x

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிப்பதாக தொழில்முதலீட்டு கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா தரிவித்தார்.

ராணிப்பேட்டை

பயிற்சி பட்டறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் உள்ளடங்கிய மற்றும் நிலையான தொழில் வளர்ச்சிக்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் நுட்பங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவரும், அரசு கூடுதல் தலைமை செயலாளருமான ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கினார். கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார். யுனிடோ இந்தியாவின் பிராந்திய அலுவலகத்தின் தலைவர் டாக்டர் ரெனேவான் பெர்க்கல், தோல் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாக இயக்குனர் செல்வம் ஆகியோர் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து விவரித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவர் பேசியதாவது:-

முக்கிய பங்காற்றுகிறது

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முதுகெலும்பாக உள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சுற்றுச்சூழல், சமூக நிர்வாகம் மற்றும் தொழில்துறை புரட்சியில் 4.0 நோக்கி பயணித்து வருகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் நிதி சேவைத் துறையில் தனது செயல்பாட்டை தீவிரப்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிலையான நீடித்த வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் அவர்களுக்கான தொழிற்சாலைகளில் நவீன காலத்திற்குகேற்ற உற்பத்தி செயல்முறை தரத்தினை மேம்படுத்திடவும், தயாரிப்பு பொருட்களின் உற்பத்தி தரத்தினை மேம்படுத்திடவும், பொருட்களின் விற்பனை உத்திகளை மேம்படுத்திடவும் மற்றும் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தை அதிகரித்து தொழிற் நிறுவனங்கள் மென்மேலும் வளர்ச்சியடைய தேவையான பயிற்சிகளை வழங்கிடும் வகையில் இன்றைய பயிற்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சிக் கூட்டத்தில் தெரிவிக்கும், நவீன உத்திகளை தெரிந்து கொண்டு செயல்படுத்திட வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

காணொலி வாயிலாக...

தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளர் பூஜா குல்கர்னி காணொலி காட்சி வாயிலாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வர்த்தகம் மேம்படுத்துதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தேபாஜிட் தாஸ், ஷரத்தா ஸ்ரீகாந்த், மூத்த ஆலோசகர் குமார், மண்டல மேலாளர்கள் ஆர்.ஜெ.ரமேஷ், ராஜேந்திரன், மோகன் மற்றும் கிளை மேலாளர் கவுரி மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்புகள், மாநில அளவிலான தொழில் நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story