கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை கண்காணித்திட வேண்டும்


கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை கண்காணித்திட வேண்டும்
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:45 PM GMT)

அனுமதிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை கண்காணித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை

அனுமதிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை கண்காணித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடை அனுமதிக்கப்பட்ட அலுவல் நேரமான பிற்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். ஒவ்வொரு சில்லறை விற்பனை கடையும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தான் செயல்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் கண்காணிக்க வேண்டும்.

கண்காணிக்க வேண்டும்

விற்பனை நேரத்தில் விதி மீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது போலீசாரால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட கடையின் செயல்பாட்டினை கண்காணிக்க சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், மண்டல துணை தாசில்தார், தாசில்தார், உதவி கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும். சில்லறை விற்பனை கடைக்கு அருகாமையில் மதுபானக் கூடம் இல்லாததை மேற்பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை சுமார் 20 அனுமதிக்கப்படாத மதுபானக் கூடங்கள் மூடி சீல் வைக்கப்பட்டது. சில பகுதிகளில் மளிகை கடை தோற்றத்தில் செயல்பட்ட மதுபான கூட கடைகள் கண்டறியப்பட்டு அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் கண்காணிக்க வேண்டும். மொத்த விற்பனையை தனி ஒரு நபருக்கு விற்பனை செய்வது விதி மீறலாக கருதப்படும். மொத்த விற்பனையால் சில சமூக விரோதிகள் கடையின் அலுவல் நேரம் அல்லாத நேரத்தில் அப்பகுதியிலோ அல்லது கடைக்கு அருகிலோ விற்பனை செய்தால் போலீசாரின் நடவடிக்கைக்கு உட்பட நேரிடும்.

கூடுதல் விலை

புதுச்சேரி எல்லையோர பகுதிகளில் உள்ள மயிலாடுதுறை மாவட்ட கிராமங்களில் புதுச்சேரி மதுபான வகைகள் விற்பனை செய்யப்படும் தகவல் கிடைத்தால் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வெளிமாநில மதுபான வகைகள் டாஸ்மாக் மதுபான வகையின் லேபிள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சில தகவல்கள் கிடைப்பதால் அதுபோன்ற விதி மீறல்கள் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.

டாஸ்மாக் பாட்டில்களின் மூடியை திறந்து குறைவான சில்லறை விற்பனை இல்லாததை உறுதி செய்ய வேண்டும். அரசினால் அனுமதிக்கப்பட்ட விற்பனை விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதை கண்காணித்திட வேண்டும். கடை நடத்தும் நேரம் விலைப்பட்டியல் வைக்க வேண்டும். கடையையும் அதன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர்(கலால்) நரேந்திரன், துணை மேலாளர் (டாஸ்மாக்) வாசுதேவன், உதவி கலெக்டர்கள் யுரேகா(மயிலாடுதுறை), அர்ச்சனா (சீர்காழி) உதவி போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மற்றும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story