லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி திருவிழா


லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி திருவிழா
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

விழுப்புரம்

திண்டிவனம்

லட்சுமி நரசிம்மர் கோவில்

திண்டிவனத்தில் பிரசித்தி பெற்ற கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவில் திண்டி, முண்டி, வால்மீகி போன்ற மகரிஷிகளால் பூஜிக்கப்பட்டு வைணவ குரவர் திருமங்கை ஆழ்வார் சுவாமிகளால் கோவை திருத்தாண்டகத்தில் பாடல் பெற்ற தலமாகும்.

இக்கோவிலில் வைகாசி மாத திருத்தேர் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் ஆராதனையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றமும், மாலையில் அம்ச வாகனத்தில் சாமி ஊர்வலமும் நடைபெற்றது.

கருடசேவை

பின்னர் இன்று(வியாழக்கிழமை) சிம்ம வாகனத்தில் வீதி உலா, நாளை(வெள்ளிக்கிழமை) காலையில் கருட சேவையும், மாலையில் அனுமந்த வாகனத்தில் சாமி வீதி உலா, நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை பல்லக்கிலும், மாலையில் நாக வாகனத்திலும், 4-ந் தேதி காலை பல்லக்கிலும் சாமி வீதி உலா, மாலை கருட சேவை நடகிறது.

தொடா்ந்து வருகிற 5-ந் தேதி காலை சொர்ணாபிஷேகமும், மாலை யானை வாகனத்திலும், 6-ந் தேதி காலை பல்லக்கிலும், மாலை சூரிய பிரபை, சந்திர பிரபையிலும், 7-ந் தேதி காலை பல்லக்கிலும், மாலை குதிரை வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

தேரோட்டம்

விழாவின் நிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் வருகிற 8-ம் தேதி நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பி.ஆர். எஸ்.ஜவுளிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார் செட்டியார், ராம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் வெங்கடேசன் செட்டியார் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் சூரிய நாராயணன், ஆய்வாளர் தினேஷ், கணக்காளர் சங்கர் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


Next Story