அம்மனுக்கு அசைவ படையல் வைத்து வழிபாடு


அம்மனுக்கு அசைவ படையல் வைத்து வழிபாடு
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:47 PM GMT)

மானாமதுரை அருகே அம்மனுக்கு கறி மற்றும் மீன் முட்டை படையல் வைத்து வழிபாடு நடைபெற்றது.

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரை அருகே அம்மனுக்கு கறி மற்றும் மீன் முட்டை படையல் வைத்து வழிபாடு நடைபெற்றது.

வழிபாடு

மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கிராமத்தை சேர்ந்த பெண்கள் அசைவ உணவு வைத்து வழிபாடு செய்யும் வினோத நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

விழாவில் கட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து விநாயகர், மனித பொம்மை, ஜல்லிக்கட்டு காளை, கொடை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை மற்றும் அசைவ கறியும், மீன், கருவாடு, முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளையும் சமைத்து பாரம்பரியப்படி ஓலைப்பெட்டியில் வைத்து விளக்கேற்றி அதை எடுத்து முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.

அசைவ படையல்

அதன் பின்னர் அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோவிலை சுற்றி வந்து அசைவ உணவுகளை படையல் வைத்து குலவையிட்டு வழிபாடு செய்தனர்.

மேலும் கோவில் பூசாரி வாயை கட்டிக் கொண்டு பெண்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை அம்மனுக்கு படையலுக்காக எடுத்து வைத்து அழகிய சவுந்திர நாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்தார்.

தொடர்ந்து அம்மனுக்கு பூஜைகள் முடிந்த பின்னர் பெண்கள் தாங்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை குடும்பத்தில் உள்ள பெண்களுடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.


Next Story