ஐ.பி.எல்.: பல சாதனை பட்டியல்களில் இடம்பிடித்த மும்பை - ஐதராபாத் இடையிலான ஆட்டம்


ஐ.பி.எல்.: பல சாதனை பட்டியல்களில் இடம்பிடித்த மும்பை - ஐதராபாத் இடையிலான ஆட்டம்
x
தினத்தந்தி 27 March 2024 6:59 PM GMT (Updated: 27 March 2024 8:54 PM GMT)

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது.

ஐதராபாத்.

17-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணிக்கு அந்த அணியின் பேன்ஸ்மேன்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசென் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதன் மூலம் ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 277 ரன்கள் குவித்தது. இது ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாகும்.

இதனையடுத்து மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடினர். இருப்பினும் அவர்களால் இலக்கை நெருங்க முடியவில்லை. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 246 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவியது. இது ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது இன்னிங்சில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.

அதிக ரன்கள் குவிக்கப்பட்ட இந்த ஆட்டம் பல சாதனைகளை படைத்துள்ளது. அவை விவரம் பின்வருமாறு:-

1. ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட ஆட்டங்களின் சாதனை பட்டியலில் இது முதலாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

அந்த பட்டியல்:-

1. ஐதராபாத் - மும்பை - 523 ரன்கள்

2. சென்னை - ராஜஸ்தான் - 469 ரன்கள்

3. பஞ்சாப்- கொல்கத்தா - 459 ரன்கள்

2. அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட ஆட்டங்களில் இது முதலாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

அந்த பட்டியல்:-

1. ஐதராபாத் - மும்பை - 38 சிக்சர்கள்

2. பெங்களூரு - சென்னை (2 முறை) / ராஜஸ்தான் - சென்னை/ - 33 சிக்சர்கள்

3. அதிக பவுண்டரிகள் (4+6) அடிக்கப்பட்ட ஆட்டங்களின் பட்டியலில் சென்னை - ராஜஸ்தான் அணிகளுடன் முதலிடத்தை இது பிடித்துள்ளது.

அந்த பட்டியல்:-

1. சென்னை - ராஜஸ்தான்/ ஐதராபாத் - மும்பை - 69 பவுண்டரிகள்

2. பஞ்சாப் - லக்னோ/ பஞ்சாப் - கொல்கத்தா - 67 பவுண்டரிகள்

3. டெக்கான் - ராஜஸ்தான் - 65 பவுண்டரிகள்

மேலும் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட ஆண்கள் டி20 போட்டிகளிலும், அதிக ரன்கள் அடிக்கப்பட்ட டி20 போட்டிகளிலும் இது முதலிடத்தை பிடித்துள்ளது.


Next Story