ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் ஜோகோவிச்-சிட்சிபாஸ் இன்று மோதல்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் ஜோகோவிச்-சிட்சிபாஸ் இன்று மோதல்
x

image courtesy: #AusOpen twitter

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

மெல்போர்ன்,

ஆண்டின் முதலாவது 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, நடப்பு விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 25-வது இடத்தில் இருப்பவருமான எலினா ரைபகினாவை (கஜகஸ்தான்) எதிர்கொண்டார்.

இந்த ஆட்டம் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகர்ந்தது. முதல் செட்டில் 4-4 என்ற கணக்கில் சமநிலை வகித்த சபலென்கா அதன் பிறகு பதற்றத்துடன் ஆடி தவறிழைத்தார். அதனை சாதகமாக்கிய எலினா ரைபகினா முதல் செட்டை 34 நிமிடத்தில் தனதாக்கினார்.

2-வது செட்டில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற சபலென்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி அந்த செட்டை சொந்தமாக்கினார். 3-வது செட்டில் ஒரு கட்டத்தில் இருவரும் 3-3 என்ற கணக்கில் சமநிலை வகித்தனர். ஆனால் அதன் பிறகு சபலென்காவின் கை ஓங்கியதுடன் வெற்றியையும் தனதாக்கினார்.

2 மணி 28 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சபலென்கா சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எலினா ரைபகினாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2021-ம் ஆண்டு விம்பிள்டன் அரைஇறுதியிலும், 2021, 2022-ம் ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் அரைஇறுதியிலும் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்த சபலென்கா இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல்முறையிலேயே கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை உச்சி முகர்ந்துள்ளார்.

சாம்பியன் பட்டத்தை வென்ற 24 வயது சபலென்காவுக்கு ரூ17¼ கோடி பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளியையும் வசப்படுத்திய அவர் நாளை வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறுகிறார். 2-வது இடம் பெற்ற 23 வயது எலினா ரைபகினா ரூ. 9½ கோடியை அள்ளினார். மேலும் 1,330 தரவரிசை புள்ளியை சொந்தமாக்கிய அவர் தரவரிசையில் முதல்முறையாக 'டாப்-10'இடத்துக்குள் நுழைகிறார்.

வெற்றிக்கு பிறகு சபலென்கா கூறுகையில், 'என்ன நடந்தது என்பதை உணர்வதற்கு எனக்கு சில நாட்கள் தேவைப்படுகிறது. தற்போது எனது உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகள் வரவில்லை. இந்த வெற்றி மிகுந்த உணர்ச்சியை அளிக்கிறது. இறுதி ஆட்டத்தில் எனது உணர்ச்சிகளை சிறப்பாக கையாண்ட விதம் மகிழ்ச்சியை தருகிறது. இந்த ஆண்டு எனக்கு நன்றாக அமைந்து இருக்கிறது. அடுத்த ஆண்டும் இதேபோல் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டு எனது ஆட்டத்தில் நிறைய சரிவுகள் ஏற்பட்டது. எனது முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்த எனது பயிற்சி குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடா-ஜாசன் கப்லெர் 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஹூகோ நியாஸ் (பிரான்ஸ்)-ஜேன் செலன்ஸ்கி (போலந்து) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)-சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் மோதுகிறார்கள். இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி பெற்றால் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலின் (22 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்வதுடன் தரவரிசையில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார்.

இதேபோல் சிட்சிபாஸ் வாகை சூடினால் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதுடன் முதல் தடவையாக நம்பர் ஒன் இடத்தை பெறுவார். இருவரும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றனர். இதில் ஜோகோவிச் 10-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறார். இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5, 3 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story