71வது பிரபஞ்ச அழகி பட்டத்தை கைப்பற்றினார் அமெரிக்காவின் ஆர்'போனி கேப்ரியல்...!


தினத்தந்தி 15 Jan 2023 7:17 AM GMT (Updated: 15 March 2023 10:13 AM GMT)

71வது பிரபஞ்ச அழகி பட்டத்துக்கான போட்டியில் அமெரிக்காவின் ஆர்'போனி கேப்ரியல் பட்டத்தை கைப்பற்றினார்.

லூசியானா,

அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற 71வது பிரபஞ்ச அழகி போட்டியில் (மிஸ் யுனிவர்ஸ் 2022) பிரபஞ்ச அழகி 2022-ன் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்'போனி கேப்ரியல் கைப்பற்றினார்.

இதில் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் உலக பிரபஞ்ச அழகி கிரீடத்திற்காக போட்டியிட்ட நிலையில், அமெரிக்காவின் ஆர்'போனி கேப்ரியல் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார். வெனிசுலாவின் டயானா சில்வா இரண்டாவது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இதற்கிடையில் இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்டதிவிதா, தனது ஆடையால் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். அதில் அவர் 'சோன் சிரியா' உடையணிந்து வந்தார். தொழில்முறை மாடல் திவிதா ராய் கர்நாடகாவில் வசிப்பவர் ஆவார்.

மேலும் இவர் மிஸ் திவா அமைப்பின் 10-வது ஆண்டு விழாவில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று, லிவா மிஸ் திவா யுனிவர்ஸ் 2022 பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பையில் லிவா பிரபஞ்ச அழகி (லிவா மிஸ் திவா யுனிவர்ஸ்) போட்டி நடந்தது. அதில் கர்நாடகாவை சேர்ந்த மாடல் அழகி திவிதா ராய் லிவா பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அந்த விழாவில் 2021 ஆம் ஆண்டு உலக பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற ஹர்னாஸ் கவுர் சந்து கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story