கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்பு...!


தினத்தந்தி 20 May 2023 7:20 AM GMT (Updated: 20 May 2023 9:25 AM GMT)

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமார் பதவியேற்றார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

அதைத்தொடர்ந்து சித்தராமையா கர்நாடக முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் அறிவிக்கப்பட்டனர். பின்னர் பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சித்தராமையா சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ராஜ்பவனுக்கு நேரில் சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்று ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்து கடிதத்தை சித்தராமையாவிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து சனிக்கிழமை (இன்று) பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று பதவியேற்றுக்கொண்டார். கர்நாடகாவில் முதல்-மந்திரியாக 2வது முறை பதவியேற்றுக்கொண்ட சித்தராமையாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அவரை தொடர்ந்து துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும், 8 மந்திரிகள் பதவியேற்றார். அவர்களுக்கு கவர்னர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவியேற்றுக்கொண்ட நிலையில் இந்த விழாவில் அகில இந்திய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதல்-மந்திரி மு.க.ஸ்டாலின், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் உள்பட பல்வேறு தலைவர்கள் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.


Next Story