இந்திய வானில் வால் நட்சத்திரம்... 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு அரிய நிகழ்வு


இந்திய வானில் வால் நட்சத்திரம்... 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு அரிய நிகழ்வு
x

இந்தியாவின் தமிழகம், லடாக், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளில் வான் பகுதியில் வால் நட்சத்திரம் பயணம் செய்யும் நிகழ்வை காணலாம்.

நியூயார்க்,

சூரிய மண்டலத்தில் நாம் வசிக்கும் பூமியில் பல ஆச்சரியம் தரும் நிகழ்வுகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் வால் நட்சத்திரம் ஒன்று 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு இந்திய வான் பகுதியில் பயணித்து, கடந்து செல்ல உள்ளது. சி/2023 ஏ3 என பெயரிடப்பட்ட இந்த வால் நட்சத்திரம், 2023-ம் ஆண்டு ஜனவரியில் வானியலாளர்களால் கண்டறியப்பட்டது.

நடப்பு ஆண்டின் செப்டம்பர் 28-ந்தேதி இந்த வால் நட்சத்திரம், சூரியனின் மிக அருகே சென்றது. இதன்பின் அதன் பயணம் திசைதிரும்பி உள்ளது. இதனால், பூமியில் இருந்து இதனை நாம் காண முடியும். அடுத்த 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு இதனை நாம் காண முடியாது. அதனால், இது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

சிறிய தொலைநோக்கிகள் அல்லது பைனாகுலர்கள் கொண்டு பார்க்கும்போது, அதன் நீண்ட வால் போன்ற பகுதியை நாம் தெளிவாக பார்க்க முடியும். காலையில் சூரிய உதயத்திற்கு சில மணிநேரத்திற்கு முன்பு கிழக்கு திசையின் கீழ் பகுதியில் இதனை பார்க்கலாம் என வானியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எனினும், சூரியன் மறைவுக்கு பின்னர் மேற்கு திசையில் இதனை நாம் பார்ப்பதற்கான ஏற்ற சந்தர்ப்பம் உள்ளது. இதன்படி, கடந்த 14-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரையிலான நாட்களில், தெளிவாக பார்க்க கூடிய வகையில் வால்நட்சத்திரம் இருக்கும். இந்தியாவின் தமிழகம், லடாக், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளில் தென்பட்ட இதனை வானியல் நிபுணர்கள் பலரும் படம் பிடித்து பகிர்ந்து வருகின்றனர்.


Next Story