மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இந்தியா கூட்டணி விரும்புகிறது - பிரதமர் மோடி தாக்கு


மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இந்தியா கூட்டணி விரும்புகிறது - பிரதமர் மோடி தாக்கு
x
தினத்தந்தி 19 May 2024 11:45 AM GMT (Updated: 19 May 2024 12:21 PM GMT)

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இந்தியா கூட்டணி விரும்புவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொல்கத்தா,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாளை (20ம் தேதி) 5ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, 6ம் கட்ட தேர்தல் 25ம் தேதியும் 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், 6ம் கட்ட தேர்தலின்போது மேற்குவங்காளத்தில் 8 தொகுதிகளுக்கு வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மேற்குவங்காளத்தில் புருலியா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக உங்களின் ஆசிபெற புருலியாவுக்கு வந்துள்ளேன். தேர்தலில் வெற்றிபெற இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தினர். ஆனால், அவை தோல்வியடைந்துவிட்டன.

மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இந்தியா கூட்டணி விரும்புகிறது. மேற்குவங்காள பெண்கள் தங்கள் வாக்குகள் மூலம் திரிணாமுல் காங்கிரசை அழித்துவிடுவார்கள்.

சரஸ்வதி பூஜையை கொண்டாடும் மேற்குவங்காளத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் செய்துள்ளது. ஊழல் செய்தவர்கள் சிறைக்கு வெளியே இருக்க நான் அனுமதிக்கமாட்டேன். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜூன் 4ம் தேதிக்கு பின்னர் ஊழல் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாகும்.

அகில உலக கிருஷ்ண பக்திக் இயக்கம், ராமகிருஷ்ண மடம், பாரத சேவஷ்ராம் சங்கத்திற்கு எதிராக கட்டுக்கதைகளை பரப்பிவிட்டு திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டது.

திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி, காங்கிரஸ் வெவ்வேறு கட்சிகளாக இருக்கலாம். ஆனால் அவற்றின் பாவங்கள் ஒன்றுதான். இந்த கட்சிகள் வளர்ச்சிக்கு எதிராக உள்ளன. மேலும், ஊழல் மற்றும் சமரச அரசியலில் ஈடுபடுகின்றன. குடியுரிமை திருத்தச்சட்டத்தின்கீழ் மேற்குவங்காளத்தில் உள்ள அகதிகள் விரைவில் இந்திய குடியுரிமை பெறுவார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story