ஆட்சியை காப்பாற்ற பகீரத பிரயத்தனம்.. காங். மேலிட பார்வையாளர்கள் இமாசல பிரதேசம் விரைந்தனர்


ஆட்சியை காப்பாற்ற பகீரத பிரயத்தனம்.. காங். மேலிட பார்வையாளர்கள் இமாசல பிரதேசம் விரைந்தனர்
x

டி.கே.சிவக்குமார், பூபிந்தர் சிங் ஹூடா

கட்சி மாறி வாக்களித்த 6 எம்.எல்.ஏ.க்கள் உட்பட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலர் முதல்-மந்திரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

புதுடெல்லி:

இமாசல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர், மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்ட விவகாரம் அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. 25 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டு போட்டதுடன், 3 சுயேச்சைகளும் வாக்களித்தனர். இதனால் பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார்.

அதன்பின்னர் கட்சியின் மூத்த தலைவர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாக பா.ஜ.க. கூறியது. அத்துடன், சட்டசபையில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த தொடர் திருப்பங்களால் இமாசல பிரதேசத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருப்பதால் காங்கிரஸ் அரசு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டால் அரசுக்கு சிக்கல் ஏற்படும்.

எனவே, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்து ஆட்சியை காப்பாற்றுவதற்காக கட்சி மேலிடம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோரை இமாசல பிரதேசத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் விரைவில் சிம்லா சென்றடைந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

கட்சி மாறி வாக்களித்த 6 எம்.எல்.ஏ.க்கள் உட்பட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலர் முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகுவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ளனர். முதல்-மந்திரியை மாற்ற வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். அவர்களுடன் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ய உள்ளனர்.

இமாசல பிரதேச கள நிலவரம் தொடர்பாக, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், சட்டசபையில் அமளில் ஈடுபட்ட 15 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

மாநில பட்ஜெட் சட்டசபையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின், பட்ஜெட்டை நிறைவேற்றப்படாமல் இருப்பதை உறுதிசெய்து, வாக்குகளைப் பிரிக்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியை காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் முறியடித்து ஆட்சியை தக்கவைப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

68 உறுப்பினர் கொண்ட இமாசல பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 6 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். பா.ஜ.க. வசம் 25 உறுப்பினர்கள் உள்ளனர். மூன்று சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளனர்.


Next Story