பிரபல சமையல் கலைஞர் குணால் கபூருக்கு விவாகரத்து வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


பிரபல சமையல் கலைஞர் குணால் கபூருக்கு விவாகரத்து வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x

சமையல் கலைஞர் குணால் கபூருக்கு அவரது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சமையல் கலைஞர் குணால் கபூர், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருக்கு விவாகரத்து வழங்க குடும்ப நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் குணால் கபூர் மேல்முறையீடு செய்தார்.

சமையல் கலைஞர் குணால் கபூருக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து 2012-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே தனது மனைவி தன்னை தொடர்ந்து அவமதிப்பதாகவும், தனது பெற்றோரை மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும், இதனால் தனக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் குணால் கபூர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி சுரேஷ் குமார் கேத் மற்றும் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குணால் கபூரின் மனைவி தரப்பில், தனது கணவர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், தான் எப்போதும் அவரிடம் அன்பாகவே நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குணால் கபூருக்கு அவரது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர். மேலும் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்புதான் என்றாலும், மரியாதை குறைவாக நடத்துவதும், கொடுமைப்படுத்துவதும் அந்த திருமண உறவை அர்த்தமற்றதாக்கி விடுகின்றன என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


Next Story