டெல்லி மருத்துவமனை தீ விபத்து - உரிமையாளருக்கு போலீஸ் காவல்


டெல்லி மருத்துவமனை தீ விபத்து - உரிமையாளருக்கு போலீஸ் காவல்
x

டெல்லி மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன.

புதுடெல்லி,

கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த 25ம் தேதி இரவு 11.32 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மருத்துவமனையில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், 7 குழந்தைகள் உயிரிழந்தன. ஏனைய குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை அறிக்கையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை தகுதியில்லா மருத்துவர்களை கொண்டு செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் கருவிகள் இல்லை என்பதும், அவசர வழி எதுவும் மருத்துவமனை நிர்வாகத்தால் திறக்கப்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மருத்துவமனையின் உரிமையாளரான நவீன் என்பவரை போலீசார் கைது செய்து டெல்லி மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நவீனை வரும் 30ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story