காதலிக்கு அடைக்கலம் கொடுத்ததால் இளம்பெண்ணை கொன்ற வாலிபர்


காதலிக்கு அடைக்கலம் கொடுத்ததால் இளம்பெண்ணை கொன்ற வாலிபர்
x

பெங்களூருவில் தங்கும் விடுதியில் காதலிக்கு அடைக்கலம் கொடுத்ததால் இளம்பெண்ணை வாலிபர் கொன்றது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு கோரமங்களாவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பீகார் மாநிலத்தை கிருதிகுமாரி (வயது 24) வசித்து வந்தார். எம்.பி.ஏ. பட்டதாரியான அவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். கடந்த 23-ந்தேதி இரவு விடுதிக்குள் புகுந்த மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த அபிஷேக் என்பவர் 3-வது மாடிக்கு சென்று கிருதிகுமாரியின் கழுத்தை அறுத்து கொலை செய்திருந்தார். இதுகுறித்து கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொலையாளி அபிஷேக்கை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில், அதே தங்கும் விடுதியில் கிருதிகுமாரியுடன் ஒரே அறையில் தங்கி இருந்த மத்தியபிரதேச இளம்பெண்ணை அபிஷேக் காதலித்துள்ளார். அபிஷேக் வேலைக்கு செல்லாமல் இருந்ததால், அவரை விட்டு இளம்பெண் பிரிய நினைத்ததுடன், அவரிடம் பேசாமல் இருந்துள்ளார். இதனால் இளம்பெண்ணை கொல்ல விடுதிக்கு சென்ற அபிஷேக் ஆள்மாறாட்டத்தில் கிருதிகுமாரியை கொன்றதாக கூறப்பட்டது.

ஆனால் கிருதிகுமாரியை அபிஷேக் திட்டமிட்டு தீர்த்துக்கட்டியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இளம்பெண்ணும், அபிஷேக்கும் முதலில் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். பெங்களூருவில் தான் செய்த வேலையை விட்டுவிட்டு போபாலுக்கு அபிஷேக் சென்றுள்ளார். அதன்பிறகு, கிருதிகுமாரியுடன் பழக்கம் ஏற்பட்டு, அபிஷேக்குடன் தங்கி இருந்த அறையை காலி செய்துவிட்டு கோரமங்களாவுக்கு இளம்பெண் வந்திருந்தார்.

அபிஷேக் வேலைக்கு செல்லாமல் சுற்றியதால், அவரை விட்டு இளம்பெண் விலகும் முடிவை எடுத்துள்ளார். இதனால் தனது காதலிக்கு தங்கும் விடுதியில் கிருதிகுமாரி அடைக்கலம் கொடுத்ததுடன், காதலை பிரிக்க அவர் முயற்சிப்பதாக நினைத்து அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கிருதிகுமாரியை விடுதிக்குள் புகுந்து அபிஷேக் கத்தியால் குத்துவது, கழுத்தை அறுப்பது போன்ற வீடியோ காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், அபிஷேக் பெங்களூருவில் இருந்து போபாலுக்கு தப்பி ஓடி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதனால் தனிப்படை போலீசார், அபிஷேக்கை பிடிக்க போபால் விரைந்துள்ளனர். மற்றொரு தனிப்படை போலீசார், அவரை பெங்களூருவில் தேடிவருகின்றனர்.


Next Story